
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அதில், தன்னிடம் பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசி வருவதாகவும், நிர்வாண புகைப்படங்களை அனுப்ப சொல்லியும் அப்படி செய்யவில்லை எனறால் இன்டெர்னல் மதிப்பெண் வழங்கமாட்டேன் என மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாக அழுதபடியே பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, காரைக்காலை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆடியோ ஆதாராங்களுடன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதேபோல் காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி புதுவை பல்கலைக்கழகத்தில் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் வளாக தலைவர் மாதவைய்யா மீதும், மேலும் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் கையில் கண்டன பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்காததால், மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனை தொடர்ந்து காலாப்பட்டு காவல்நிலைய போலீசார் நள்ளிரவு 2 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தி, 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களமானது. இதனால் புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்ககோரியும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர உள்ளனர்.








