தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.10.2025) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையைச் சார்ந்த தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில், கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக வளாகத்தில் “உலக புத்தொழில் மாநாடு 2025”–யைத் தொடங்கி வைத்து, தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை-2025 (Tamil Nadu Startup EcoSystem Report 2025) மற்றும் “Highlights of Startup Vision Report 2035 for Tamil Nadu” அறிக்கைகளை வெளியிட்டு, தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைத் தொகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய அனுமதி ஆணைகளை வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
“உலக புத்தொழில் மாநாடு 2025” தொடங்கி வைத்தல்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில், கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக வளாகத்தில், தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலை உலகத் தரத்தில் மேம்படுத்தும் முயற்சியாகவும், தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு பன்னாட்டு இணைப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் 9.10.2025 மற்றும் 10.10.2025 ஆகிய இரண்டு நாட்கள் “உலக புத்தொழில் மாநாடு 2025” நடைபெறுகிறது.
தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை மற்றும் Vision 2035 - வெளியிடுதல்
அதனைத் தொடர்ந்து, Inc42 நிறுவனம் தயாரித்த "தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை-2025” (Tamil Nadu Startup EcoSystem Report 2025) மற்றும் ஸ்டார்ட் அப் ஜீனோம் அமைப்பு தயாரித்துள்ள “Highlights of Startup Vision Report 2035 for Tamil Nadu” என்ற தொலைநோக்கு அறிக்கைகளின் முதல் நிலை செயல்திட்ட வரைவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வெளியிட்டார்.
தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைத்தொகுப்பு வழங்குதல்
பெல்ஜியம் தூதர் டிடியர் வாண்டர்ஹாஸெல்ட் (Mr. Didier Vanderhasselt) அவர்களால் "Hub.Brussels – My Welcome Package Award'' எனும் சலுகைத்தொகுப்பினை இரண்டு தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் நிதி வழங்குதல்
மாற்றுத்திறனாளிகளால் நிறுவப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனங்களான – 1) மனிதவள மேலாண்மைத் துறையில் இயங்கும் Warpe academy private limited
2) மிண்ணனுவியல் துறையில் இயங்கும் ediode electronics private limited
3) ஆடை விற்பனைத் துறையில் இயங்கும் letsbuysarees நிறுவனம் மற்றும்
4) மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் humart நிறுவனம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களால் நிறுவப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனங்களான –
1) நவீன திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் Evolvance
2) விவசாயத்துக்கு தேவையான தானியங்கி இயந்திரங்கள் சேவை அளிக்கும் சிவானி ட்ரோன் சர்வீசஸ் நிறுவனம்
3) ஆடை வடிவமைப்பு துறை சார்ந்த kals apparel
4) உணவு விற்பனை துறையில் இயங்கும் princess of Trichy refreshments நிறுவனம் ஆகிய எட்டு நிறுவனங்களுக்கு புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ், தலா 5 இலட்சம் ரூபாய், என மொத்தம் 40 இலட்சம் ரூபாய்க்கான முழு மானியத்துடன் கூடிய அனுமதி ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், உலகத்தரத்திலான தொழில் வளர்பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றிற்காக, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் பிரான்சு நாட்டின் Link Innovations, பிலிப்பைன்ஸ் நாட்டின் Techshake, ஜெர்மனி நாட்டின் Asia Berlin உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
புத்தொழில் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகள்
இம்மாநாட்டில், தமிழ்நாட்டைச் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் (D2C) பெண் தொழில்முனைவோர்களின் புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்களின் புத்தாக்க முயற்சிகள், விண்வெளி தொழில்நுட்பத் துறை புத்தொழில் நிறுவனங்கள், மேம்பட்ட உற்பத்தி துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களுக்கு பன்னாட்டு சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 21 நாடுகள் பங்கேற்ற பன்னாட்டு அரங்குகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.