
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டள்ளார். இதையடுத்து இதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
இதையடுத்து மருத்துவ பயனாளர்கள் என்று அழைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "ஏறி வந்து ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. நோயாளிகளை மருத்துவப் பயனாளர்கள் என அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது. கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்று கூட சொல்ல தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்.
அ.தி.மு.க அமைப்பது வலுவான கூட்டணியா, நஞ்சு போன கூட்டணியா, தோல்வி கூட்டணியா என நான் ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது. 2026 தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருவதுபோல் 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றிபெறுவோம்” என தெரிவித்துள்ளார்.








