
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மாநில அரசுகளின் உரிமைகளையும், குரல்களையும் ஒடுக்க முயற்சித்து வருகிறது. இதை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்கள் துணிச்சலுடன் எதிர்த்து தங்களது மாநில உரிமைகளை மீட்டெடுத்து, வருகிறார்கள்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
இக்குழுவினர், கடந்த பிப்.16 ஆம் தேதி, தங்களது முதல் பாக அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளனர். பின்னர் இந்த அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேவையில் பிப்.18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஆளுநர் பதவி, அதிகாரப் பகிர்வு, நிதி சுயாட்சி உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து குரியன் ஜோசப் தலைமையில் குழுவினர் இரண்டாம் பாகம் குறித்த ஆலோசனைகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த அறிக்கைக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய, கர்நாடக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ”கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல - அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கமாகும். மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரமும், நிதி சுதந்திரமும் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும்.
இந்தியாவின் பலம் என்பது கூட்டாட்சி, அரசியலமைப்பு ரீதியிலான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை மதிப்பதில் தான் அடங்கியுள்ளது. ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து அதன் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. கர்நாடகாவும் இதற்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதற்பாகம் குறித்த தங்களது வரவேற்புக்கு நன்றி, சித்தராமையா அவர்களே.
எங்களது முன்னெடுப்புக்கான தங்களது அறிவார்ந்த ஆதரவையும், கூட்டாட்சிக் கருத்தியலைப் புதுப்பிக்கும் முயற்சி கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் எனத் தாங்கள் அங்கீகரித்திருப்பதையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.
“பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மை கொண்டு நிலைக்கச் செய்ய முடியாது, அரசியலமைப்பின் வழியிலான நம்பகத்தன்மை மூலமே அதனைச் செய்ய இயலும்” எனத் தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிகச் சரியானது என ஆமோதிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.








