சென்னை மறைமலை நகரில், திராவிட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி தொடக்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், எல்லா விமர்சகர்களை தாங்கி கொண்டு,மக்களின் நலனுக்கு போராடியவர் பெரியார். இந்த நூற்றாண்டு காலத்தில் யாரெல்லாம் பெரியாரை எதிர்த்தார்களோ, அவர்கள் வந்து நிற்கும் இடம் பெரியார். தேசத்தை காக்க வேண்டும் என்றால், திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தான் மருந்து” என தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், ”ஆரியம் என்ற கருத்தியலுக்கு எதிராக வந்த கருத்தியல் திராவிடம். இன்று உலக முழுவதும் தந்தை பெரியாரின் கருத்துக்களை இளைஞர்கள் தேடி படித்து வருகின்றனர்.
தி.மு.கவும்,தி.கவும் இரட்டை குழல் துப்பாக்கி என்றால்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்றாவது குழல் என்று சொன்னால் அது பெருமைதான். தேர்தல் அரசியலில் பங்கேற்கவில்லை என்றாலும் மக்கள் நலனுக்காக துணை நிற்கிறது திராவிடர் கழகம்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திராவிட கழக தலைவர் கீ.வீரமணி பேசுகையில், பெரியார் உலகமயமானவர். ஆகையால் தான் உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து 100 ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக் கொண்டுள்ளீர்கள்.
இளைஞர்களுக்கு ரசிகர் மன்றம் தெரியும் இந்த காலத்தில், நம் பாட்டனார்கள் பட்ட துயரம் தெரியவில்லை. மாணவர்கள் படிப்பதற்காக பணம் கொடுக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி. அம்பேத்கரும் பெரியாரும் ஓரு நாணயத்தின் இரு பக்கங்கள். பெரியார் இருந்ததால்தான் இப்போது நாம் அனைவரும் படிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.