துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (1.9.2025) சென்னை நந்தனத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் முன்னெடுப்புகளான கல்லூரிக் கனவு திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல்;
பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சி வழங்குதல், SCOUT திட்டம், தமிழ்நாடு திறன் போட்டிகள், நிரல் திருவிழா(Hackathon), தமிழ்நாடு மாநில அளவிளான வேலைவாய்ப்பு திட்டம் (TNSLPP), உயர்வுக்குப்படி திட்டம், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் (குடிமைப்பணித் தேர்வு, ஊக்கத் தொகை திட்டம் மற்றும் SSC/RRB & Banking போட்டித் தேர்வுகளுக்கான உறைவிடப் பயிற்சி) ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் தலைசிறந்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பினை பெறவும், கல்லூரி படிப்பினை முடித்தவுடனே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு, தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளவதற்காகவும் ”நான் முதல்வன்” மற்றும் “வெற்றி நிச்சயம்” திட்டங்களை தொடங்கி வைத்து, செயல்படுத்தி வருகின்றார்.
இத்திட்டங்களின் காரணமாக திறன் வளம் மிக்க இளைய சமுதாயத்தை கொண்டதாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளதால், உலக அளவிலான முன்னணி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலைகளின் மூலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். மேலும் தமிழ்நாடு 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகின்றது.
நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
நான் முதல்வன் SCOUT திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம், தென்கொரியா நாட்டின் பூசன், கோச்சான் பல்கலைக் கழகங்கள், தர்ஹம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல்கலைக் கழகங்களிலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் Data Science, AI, Bio Technology போன்ற துறைகளில் உலகளாவிய தொழில்முறை பயிற்சி அளிக்கப்பட்டு பேங்க் ஆப் நியூயார்க், சிட்டிகார்ப், Zoho, HCL டெக் போன்ற பெருநிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, “Placement Readiness Training through Corporate Volunteering” அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில் துறையின் நிபுணர்கள் நேரடியாக மாணவர்களுக்கு வழிகாட்டி, வேலைவாய்ப்பிற்கு தேவையான அத்தியாவசிய திறன்களைப் பகிர்ந்து பயிற்சி வழங்குகின்றனர். தற்போது Cognizant, Capgemini, Avantor, First Source, Kambaa, Milacron, HCLTech, Kotak Bank, HDFC Bank, Ford உள்ளிட்ட 28 முன்னணி நிறுவனங்களின் 131 நிபுணர்கள் 22 அரசு கல்லூரிகளைச் சேர்ந்த 3,899 இறுதியாண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு திறன் போட்டி (TNSkills Competition) பயிற்சி மூலம், இந்திய திறன் போட்டியில் தமிழ்நாடு, கடந்த ஆண்டில் 40 பதக்கங்களை வென்று 3 ஆம் இடத்தினை பிடித்தது.
இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைத் திறனை வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நான் முதல்வன் நிரல் திருவிழா திட்டத்தின் மூலம் நுட்பவியல் சவால்கள் (problem statements) இறுதி ஆண்டுப் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, முதலாவது பதிப்பில் 8,486 குழுக்களும், இரண்டாவது பதிப்பில் 15,337 குழுக்களும் பங்கேற்றன.
கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த 3,60,389 இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் நான் முதல்வன் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 1.7.2025 அன்று தொடங்கப்பட்ட "வெற்றி நிச்சயம்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்து வேலைத்தேடும் இளைஞர்களுக்கு மொத்தம் 38 தொழிற்பிரிவுகளில் 165 விதமான திறன் பயிற்சிகள், ZF Rane, TVS Supply Chain, MRF, Saint Gobain, TI Murugappa Group, Brakes India, Tata Electronics, LG, Ashok Leyland, Apollo, Tally உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலம் கட்டணமில்லா குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகின்றது.
மேலும், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கைத் தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுப் பகுதியில் வாழும் இளைஞர்கள், தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், திருநங்கைகள், ஆதரவற்ற விதவைகள் போன்ற சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு திறன் பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, ரூ.12,000 வரை திறன் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதன் மூலம், பயிற்சி பெற்றவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. பயிற்சியில் ஜெர்மன் உள்ளிட்ட அயல்மொழிப் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன, இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான பாதைகள் உருவாக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் தற்போது 29,855 நபர்கள் திறன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து ஊக்குவிக்க வேண்டும். 2026 இல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச திறன் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையினை உயர்த்த தேவையான உயர்தர தொழில்நுட்ப பயிற்சியினை வழங்க வேண்டும்.
நிரல் திருவிழா 2.0 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களை அதிகப்படுத்தி அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ் அரசு பணிகளில் பணிவாய்ப்பு பெறுபவர்களின் தேர்ச்சி எண்ணிக்கையை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் அவர்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் திறன் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.