அரசியல்

“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னையில் CNN NEWS 18 சார்பில் நடைபெற்ற “TOWN HALL CHENNAI” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2026) சென்னையில் CNN NEWS 18 சார்பில் நடைபெற்ற “TOWN HALL CHENNAI” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.

 கருத்து பரிமாற்றங்களாலும், விவாதங்களாலும், உரையாடல்களாலும் மாபெரும் அறிவுப்புரட்சியை நடத்திக்காட்டி இருக்கும் தமிழ்நாட்டில், இந்த ‘டவுன்ஹால்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் CNN - News 18 ஊடக நிறுவனத்திற்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மக்களிடையே விதைக்கப்படும் நல்ல கருத்துகள்தான், முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமையும். அப்படி, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் கொள்கை முகமாக 75 ஆண்டுகள் கடந்த மாபெரும் அரசியல் இயக்கமாக, மக்களின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கத்தின் எதிர்காலத்திற்கான திசைகாட்டியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களை வழங்கியிருக்கிறார்.

அதில் முக்கியமான ஒன்று, "வன்முறை தவிர்த்து, வறுமையை வெல்வோம்!". திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பை ஏற்கும் போதெல்லாம் இதை மனதில் வைத்துதான் மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இங்கு ஏராளமான ஊடகவியலாளர்கள் இருக்கிறீர்கள்.
11.19 சதவிகிதம் வளர்ச்சி என்பதை, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்தால் சாதிக்க முடிந்திருக்கிறது? அதுவும் எப்படிப்பட்ட சூழலில் இதை சாதித்திருக்கிறோம்?

“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் சிறிதும் மதிப்பு தராத பா.ஜ.க. ஆட்சி ஒன்றியத்தில் ஆளுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை, எந்தளவிற்கு வஞ்சகத்துடன், ஓரவஞ்சனையுடன் அவர்கள் Approach செய்கிறார்கள் என்று நான் உங்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே அது நன்றாகத் தெரியும்.

ஆளுநர்கள் மூலமாக நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பது வரைக்கும், அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டும்தான் அவர்களுக்கு தெரிந்த Politics.

ஆனால், இதையெல்லாம் அரசியல் தளத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, "வளர்ச்சி அரசியல் என்றால், தமிழ்நாட்டைப் பாருங்கள்" என்று சொல்லும் அளவிற்கு Development Politics-க்கான அடையாளமாக தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது.

அதுவும் ஒரு தரப்புக்கான வளர்ச்சி இல்லை; ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற பரந்துபட்ட வளர்ச்சி! பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரையும் ‘Empower’ செய்யும் Politics-யை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.

நாங்கள் செய்திருப்பது மாதிரியான திட்டங்களை வேறு எந்த மாநிலத்திலாவது செய்து இருக்கிறார்களா? ‘Growth’ சாதாரணமாக வந்துவிடுமா? இத்தனை திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதால்தான் 11.19 சதவிகிதம் ‘Growth’ சாத்தியமாகியிருக்கிறது!

தமிழ்நாட்டில் எந்தக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும், அவர்களில் ஒருவராவது நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைந்து கொண்டிருப்பார்கள்! அதனால்தான், ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்களை இன்றைக்கு நாங்கள் சந்திக்கிறோம்!

“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்று இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு காண்பிக்கும் செயல்பாடுகளும் பா.ஜ.க.வை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது. ஆனால், அவர்களின் சதி அரசியல் Expose ஆகி, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

பா.ஜ.க.வின் ‘Pattern’ என்ன என்று தி.மு.க. மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்களின் அரசைக் கொண்டுவரப் பயன்படுத்திக்கொண்ட ‘வாஷிங் மெஷினை’, இங்கும் கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்களின் N.D.A. கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பல பேர் ரெய்டுகளுக்கு ஆளானவர்கள். 10 பேர் மேல் D.V.A.C-யில் வழக்குகள் இருக்கிறது. ஆனால், கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் சில பேர் மேல் F.I.R. கூட பதிவு செய்ய விடாமல் நிறைய ஆண்டுகளாக ஆளுநர் மூலமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்த இலட்சணத்தில், இப்போது E.D. – I.T. – C.B.I. ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டலாமா என்று பார்க்கிறார்கள். என்னதான் பா.ஜ.க. E.D., I.T., C.B.I. என்று தன்னுடைய படைப் பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்.

E.D. இதுவரைக்கும் பதிவு செய்த எட்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகளில் எத்தனை வழக்குகள் முழுமையாக நடைபெற்றிருக்கிறது? அவர்களின் உண்மையான ‘Conviction rate’ என்ன? ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் எல்லோரும் உடனடியாக யாருடன் கூட்டணி சேருகிறார்கள்? புலனாய்வு முகமைகளை இவ்வளவு மலிவாக பயன்படுத்திதான் பா.ஜ.க. அரசியல் சதுரங்க வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு N.D.A. கூட்டணி என்று பெயர்.

மக்கள் பா.ஜ.க.வை நம்ப வேண்டும் என்று, பழனிசாமி போன்ற ஆமாம்சாமியை பா.ஜ.க.வின் கிளைக் கழகச் செயலாளராக வைத்துக்கொண்டு ‘டப்பா எஞ்சின்’ எடுத்துக்கொண்டு உள்ளே வர நினைக்கிறார்கள்.

பா.ஜ.க. உள்ளே நுழைந்தால், எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதைதான் இப்போது அண்மையில் மகாராஷ்டிராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாநில கட்சியை உடைத்து ஆட்சிக்கு வந்த அவர்கள், இப்போது பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான 5 விழுக்காடு இடஒதுக்கீட்டை இரத்து செய்திருக்கிறார்கள்.

மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 28 இலட்சம் பெண்களை நீக்கியிருக்கிறார்கள். இதைதான் தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ‘ட்ரோஜன் குதிரை’ தான் அ.தி.மு.க. அதனால்தான் பழனிசாமி அவர்கள் வழங்கும் எந்த வாக்குறுதியையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. மண்குதிரையை நம்பி யாராவது ஆற்றில் இறங்குவார்களா? நிச்சயம் மாட்டார்கள்!

எங்களை பொறுத்தவரைக்கும் எங்களின் இலட்சியங்களும் கடமைகளும் மிகவும் பெரியது. அதை நோக்கிய பயணம்தான் எங்களுடைய தேர்தல் வெற்றிகள். "எல்லாருக்கும் எல்லாம்", "எங்கும் தமிழ் - எதிலும் தமிழ்", "அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி" என்று மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து, ஒன்றுபட்ட இந்தியாவில், மாநிலங்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்து, உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலை நிறுவ வேண்டும் என்று எங்களின் அடுத்தகட்டப் பயணத்தையும் தொடங்கியிருக்கிறோம்.

"மாநில சுயாட்சி" என்பது பேரறிஞர் அண்ணா அவர்கள் எங்களுக்கு வழங்கிய உயிர்க்கொள்கை. உண்மையான வளர்ச்சியை நம்முடைய இந்திய நாடு அடைய வேண்டும் என்றால், மாநிலங்களுக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஏன் என்றால், மாநில அரசுகள்தான், மக்களுக்கு நெருங்கிய அரசுகள். ஒன்றிய அரசு என்பது தனக்கு தேவையான அதிகாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றை மாநிலங்களிடம் வழங்க வேண்டும்.

“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

பிரதமர் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து, வளர்ச்சி அடைந்த நாடுகளைப் பார்க்கிறாரே... அப்படிப்பட்ட வளர்ச்சியை இந்தியாவும் அடைய வேண்டும் என்றால், மாநில சுயாட்சிக்கான அரசியல் சட்டத்திருத்தத்தையும் கொண்டு வர வேண்டும். உண்மையான வளர்ச்சியை, மக்களுக்குத் தரமான வாழ்க்கையை மாநிலங்கள் சாதித்துக் காட்டுகிறோம்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சிதான் அடிப்படை. இதுகுறித்து, அண்மையில் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். அதுமட்டுமல்ல, ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை அமைத்து, அந்த குழுவினுடைய அறிக்கையின் முதல் பாகத்தையும் நான் வெளியிட்டிருக்கிறேன். அதை அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்து, தேசிய அளவில் மாநில சுயாட்சிக் கருத்தியல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம்.

C.N.N. போன்ற ஊடகங்கள் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை விளக்கி, மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று இந்த நேரத்தில் என்னுடைய அன்பான கோரிக்கையை நான் எடுத்துவைக்க விரும்புகிறேன்.

எங்களைப் பொறுத்த வரைக்கும், சமத்துவம் - சமூகநீதி - மதச்சார்பின்மை - சகோதரத்துவம் - மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்கள் குறித்து இந்தியா முழுவதும் ஒரு பரந்துபட்ட பார்வை உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம். அதுதான், இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அந்தப் பாதையைக் காட்டுவதற்கான ஒளியாகதான், திராவிட மாடலை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். இந்தப் பணியிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நான் மக்களை நம்புபவன். மக்களுக்கான எங்களின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!

தமிழ்நாட்டில் நடக்க இருப்பது, ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். நான் உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாடு v/s  N.D.A. என்ற இந்த தேர்தலில் தமிழ்நாடுதான் நிச்சயம் வெல்லும்! அதற்கான கருத்துகளை மக்களிடம் இன்னும் வலுவாக கொண்டு சேர்க்க C.N.N. ஊடகத்தின் இந்த ‘டவுன்ஹால்’ நிகழ்வு துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அந்த வகையில்  இந்த நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்தையும் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

banner

Related Stories

Related Stories