சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையக் கூட்டரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், புதிதாக பணியில் சேருகின்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையை சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு அவர்களுடைய பணி சிறப்பாக மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கி உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சிப் பெற்று நெடுஞ்சாலைத்துறையில் பணியில் சேருகின்ற 45 உதவிப் பொறியாளர்களையும், பொதுப்பணித்துறையில் பணியில் சேருகின்ற 165 உதவிப் பொறியாளர்களையும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள், வரவேற்று உரையை தொடங்கினார்.
அவர் பேசியது வருமாறு:-
இன்று, 91 சகோதரிகள் பொறியாளர்களாகப் பதவி பெற்று பணியை தொடங்குகிறார்கள். “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு“ என்ற நிலைமாறியுள்ளதை நினைக்கும்போது, தந்தை பெரியார் ஞாபகம்தான் வருகிறது. தந்தை பெரியார் வெற்றி பெற்றுள்ளார் என்பதே என்னுடைய எண்ணம்.
“மக்களிடம் செல் - அவர்களுடன் வாழ், அவர்களிடம் கற்றுக்கொள் - அவர்களை நேசி,
அவர்களுக்கு சேவை செய் – அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமைப்பு செய்“ என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். இந்த வழியில்தான் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், அறிவியல், கணிதம் மற்றும் நடைமுறை அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் பொறியியல் என்பதை விளக்கி கூறினார்.
சிவில் இன்ஜினியரிங் துறையில் கட்டடங்கள் கட்டுவது, குடிநீர் வழங்குவது, சாலை வசதிகள் அமைப்பது, பாசனத்திற்கு அணைகள் கட்டிக் கால்வாய் அமைப்பது போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் அவர்கள், முதன்முதலாக மனிதன் பொறியியல் துறை மூலம் கண்டறிந்தது சக்கரம்தான்; சக்கரம் உருவானப் பிறகுதான் மனிதனின் உழைப்பு எளிமையானது; பொது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி பணிகளையும் சேவையாக செய்திட அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதுதான் பொதுப்பணித்துறை என்றும், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட கல்லணை, 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் பல ஆன்மீகத் தலங்கள், தமிழர்களின் பொறியியல் திறமைக்கு சான்றாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
பொதுப்பணித்துறை, மராமத்துத்துறை என்ற பெயரில்தான் செயல்பட்டு வந்தது. இந்த துறையிலிருந்துதான் மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை வீட்டுவசதி வாரியம், குடிமை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், காவலர் வீட்டு வசதி வாரியம் போன்ற பல துறைகள் பிரிந்து சென்றுள்ளன. கடைசியாக நீர்வளத்துறை பிரிந்து சென்றுள்ளது.
1946 ஆம் ஆண்டு, நெடுஞ்சாலைத்துறை உருவாக்கப்பட்டது. பெரும்பாலான துறைகளுக்கு தாய்த்துறை பொதுப்பணித்துறைதான் என்று விளக்கி கூறினார்.
அனைத்து அரசுக் கட்டடங்கள் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் போன்ற அனைத்து கட்டமைப்புகளை பராமரிப்பதுடன் இயற்கை பேரிடர்களிடமிருந்து பாதுகாக்கும் பணியிலும், உதவிப் பொறியாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும், பொதுக் கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், தேர்கள் ஆகியவற்றிற்கான உறுதித் தன்மை சான்றிதழ்களை ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அனைத்து உதவிப் பொறியாளர்களும் நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள் மற்றும் சுற்றறிக்கைகள் ஆகியவற்றை நன்கு படித்து, அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டும்போது, மண்பரிசோதனை, குடிநீர் பரிசோதனை, கட்டுமானப் பொருட்களின் தரம், உப்பு அதிகம் இல்லாத தண்ணீர், சிமெண்ட் மூட்டையின் எடை மற்றும் தரம், மணலின் தூய்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், “தரமே நிரந்தரம்“ என்றும் தரமான கட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.
சாலைகள் தரமானதாக இருந்தால்தான், பாதுகாப்பான பயணம், பயணநேரம் குறைவதுடன் எரிபொருள் சிக்கனம், சுற்றுலா வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும்; நாட்டின் மூலதனத்தை உயர்த்தும் துறையாகப் பொதுப்பணித்துறை விளங்குகிறது. பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள், பாலங்கள் போன்ற அனைத்தும் அரசாங்கத்தின் மூலதனம் என்று குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், இந்த மூலதனங்களை உருவாக்குவது நெடுஞ்சாலைத்துறையும், பொதுப் பணித்துறையும்தான் என்று எடுத்துரைத்தார்.
ஒரு டாக்டரின் சிகிச்சையில் குறைபாடு இருந்தால், அது நோயாளியின் குறைபாடாகதான் இருக்கும்; ஒரு வழக்கறிஞரின் வழக்கு தோல்வியடைந்தால், அதற்கு வழக்கறிஞர் பொறுப்பேற்கமாட்டார்; ஆனால், ஒரு இன்ஜினியரின் கட்டுமானத்தில் குறைபாடு ஏற்பட்டால் இன்ஜினியர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 2030இல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் “ஒரு ட்ரில்லியன் டாலராக விளங்க“ இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறார். அண்மையில் ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19% விழுக்காடாக அதிகரித்துள்ளது. தனிநபர் வருமானம் ஓர் ஆண்டுக்கு ரூ.3.6 இலட்சம் என்ற அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதே வளர்ச்சி விகிதத்தில் நாம் முன்னேறினால், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்ததிருக்கிற ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை“ எளிதாக அடைந்து விடலாம் என்று தெரிவித்தார்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பிறகு பொதுப்பணித்துறையில் 799, நெடுஞ்சாலைத்துறையில் 1016 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
“உழைப்பவரே உயர்ந்தவர்“என்னும் கொள்கையை மனதில் பதித்து கொண்டு, பணியாற்ற வேண்டும் என்று அனைத்து பொறியாளர்களையும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.