எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது புலனாய்வு அமைப்புகளை வைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் ஒன்றிய பாஜக அரசு, தங்கள் ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், பாஜக ஆட்சியின் அவலங்களை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் தி வயர் நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபர் ஆகியோருக்கு பாஜக ஆளும் அசாம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பாஜக அரசு தேசதுரோக சட்டத்தில் நடவடிக்கை எடுத்த நிலையில், அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, எனினும் தற்போது அதற்கு பதிலாக BNS 152வது பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமுக வலைதள பக்கத்தில், "பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் ஆகியோருக்கு அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு, இது தொடர்புடைய வழக்கில் பாதுகாப்பு வழங்கிய போதிலும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, இதனால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது. சுதந்திரமான பத்திரிகைத் துறையை ஒடுக்குவதற்காக, ரத்து செய்யப்பட்ட தேசத்துரோக சட்டத்திற்குப் பதிலாக, இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் (BNS) பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது"என்று கூறப்பட்டுள்ளது.