
கோயம்புத்தூர், தடாகம் சாலை, ஆர்.எஸ். புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து, கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி வெண்பாவிற்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அடைப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட பின்பு அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 25.02.2026 அன்று சிறுமியின் மூளை செயலிழந்ததை தொடர்ந்து, அவரது பெற்றோர்கள் ஒப்புதலோடு அச்சிறுமியின் சிறுநீரகம், கல்லீரல், தோல் மற்றும் கண் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.2.2026) மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோர் கோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ் - திருமதி சுகன்யா ஆகியோரை சந்தித்து, சிறுமியின் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்து, உறுப்பு தானம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் சோமு மற்றும் சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்!
சோமு அவர்கள் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.
உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும்!
இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்" என தெரிவித்துள்ளார்.






