ஏப்ரல் 2024 முதல் ஜூலை 2025 வரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அனல் மின் நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிலக்கரி அளவு மற்றும் கையிருப்பு குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின் நிலையங்களுக்கு தடையற்ற நிலக்கரி போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ரயில் ரேக்குகள் போன்ற கூடுதல் தளவாடங்களை வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPGCL) விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசின் பதில் என்ன? நிலக்கரி ஒதுக்கீட்டை சரிசெய்தல் மற்றும் நிலக்கரி தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசின் பதில் என்ன? கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு நிலக்கரி தரத்தால் ஆலை வாரியாக தமிழ்நாடு எதிர்கொண்ட பிரச்சினைகளின் விவரங்கள் குறித்தும் அவர் விரிவான பதில் வேண்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிடப்பில் போடப்பட்டுள்ளதா புதுப் பாலங்களுக்கான கோரிக்கை?
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்ட மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் அனுமதி வழங்கப்பட்டவை மற்றும் கட்டுமானத்தில் உள்ளவை எத்தனை? மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் செலவுப் பகிர்வு உட்பட இந்தத் திட்டங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி முறை என்ன? நிலம் கையகப்படுத்துதல், வடிவமைப்பு ஒப்புதல்கள்/மாநில நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு சிக்கல்கள் காரணமாக பாலங்கள் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதா? நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்தவும், குறிப்பாக அதிக போக்குவரத்து மண்டலங்களில் பாதுகாப்பான மற்றும் நெரிசல் இல்லாத ரயில்-சாலை க்ராஸிங்களை உறுதி செய்யவும் அரசு எடுத்துள்ள/எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.