திராவிட இயக்கத்துக்கும் இதழியலுக்குமான உறவு நூற்றாண்டைக் கடந்தது. திராவிட இயக்கங்களின் தாய் அமைப்பான, 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்', தான் தொடங்கிய 'ஜஸ்டிஸ்' என்ற ஆங்கில இதழின் பெயராலேயே ஆங்கிலத்தில் 'ஜஸ்டிஸ் பார்ட்டி' என்றும் தமிழில் 'நீதிக்கட்சி' என்றும் அழைக்கப்பட்டது.
சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை ஆகியவற்றைத் தமிழ் மக்களிடம் பரப்புவதற்காக 'குடி அரசு' இதழைத் தொடங்கினார் தந்தை பெரியார். 'திராவிட நாடு' இதழில் பேரறிஞர் அண்ணா, தன் 'தம்பிகளுக்கு' எழுதிய கடிதங்களில் அரசியல், உலக வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றைப் பதிவு செய்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் சிறுவனாக இருந்தபோதே 'மாணவ நேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். பிறகு 'முரசொலி' இதழைத் தொடங்கிய கலைஞர், கட்டுரைகள், கார்ட்டூன்கள், உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள் என்று அதை அரசியல் ஆயுதமாகவே மாற்றினார். 'குடி அரசு', 'உண்மை', 'விடுதலை', 'திராவிட நாடு', 'முரசொலி', 'மன்றம்' 'நம்நாடு', 'மாலைமணி', ‘Homeland”, ‘Rising Sun' என்று நூற்றுக்கணக்கான திராவிட இயக்க இதழ்கள் வெளியாகின.
காலத்துக்கேற்றவாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் திராவிட இயக்கம் தவறியதில்லை. 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியைத் தொடங்கியதுடன், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் முதன்முதலாக சமூகவலைதளங்களில் கணக்கு துவங்கி, அவ்வப்போதைய தன் அரசியல் நிலைப்பாடுகளை அழுத்தமாகப் பதிவு செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
அவர் வழியில் கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சமூக வலைதளத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைப்பாடுகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இணைய மற்றும் காணொலித் தளங்களிலும் தொடர்ச்சியாகத் திராவிட இயக்கக் கருத்துகள் பதியப்பட்டு பரவலான வரவேற்பு பெறுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இத்தகைய பாரம்பரியமிக்க திராவிட இயக்க இதழியல் வரலாற்றில், உங்களையும் இணைத்துக்கொள்ள ஒரு மகத்தான வாய்ப்பு.
கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியும், 'முரசொலி' நாளிதழும் இணைந்து 'கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்' என்னும் மகத்தான முயற்சியை முன்னெடுக்கின்றனர்.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி பெறுவதன் மூலம் நீங்கள் 'முரசொலி' மற்றும் 'கலைஞர் தொலைக்காட்சி போன்ற பெரும் ஊடகங்களிலும் அவை சார்ந்த இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் செய்தியாளர், புகைப்படக் கலைஞர், டிசைனர், எடிட்டர், ஒளிப்பதிவாளராக ஓராண்டு பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். நீங்கள் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெறும்போது மதிப்பூதியமும் வழங்கப்படும்.
செய்தியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள்
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில், 1,000 சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி அனுப்பவும். தாளின் ஒருபக்கத்தில் மட்டும் எழுதவும். எழுதுவது முழுக்க உங்கள் சொந்த முயற்சியாக இருக்கவேண்டுமே தவிர, ஏதேனும் புத்தகத்தில் இருந்தோ, இணையத்தில் இருந்தோ எடுத்து அப்படியே பயன்படுத்தக்கூடாது.
தலைப்புகள்
திராவிடத்தால் வாழ்கிறோம் - திராவிட இயக்கம் தோன்றிய சூழல், திராவிட இயக்கத்தின் வரலாறு, தமிழர்கள் வாழ்வில், திராவிட இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து எழுத வேண்டும்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் மொழிப்போர் வரலாறு, தமிழுணர்வின் அவசியம், திராவிட இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள், இன்றும் தொடரும் மொழிப்போர் ஆகியவை குறித்து எழுதவேண்டும்.
ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி - இந்தியா என்பது, எப்படி மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது, மாநில சுயாட்சியின் அவசியம், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைகள் ஆகியவை குறித்து எழுத வேண்டும்.
திருப்பங்கள் ஏற்படுத்திய திராவிட அரசுகள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அரசுகள் செய்த சாதனைகள், அதனால் பலனடைந்த தமிழ்நாடு குறித்து எழுத வேண்டும்.
நூற்றாண்டு நாயகர் கலைஞர் - கலைஞர் என்னும் மாபெரும் ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் வகையில் எழுத வேண்டும்.
புகைப்படக் கலைஞர், ஒளிப்பதிவாளர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள்
நீங்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பிற்கு ஏற்ற படைப்புகளை (புகைப்படங்கள், காணொலிக் காட்சிகள்) 88071-93390 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அல்லது kalaignarstudentjournalist@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும்.
மேலும்... https://www.kalaignarstudentjournalist.com/ என்ற இணையதள முகவரியை விண்ணப்பிக்கவும்.