மாண்புமிகு துணை முதலமைச்சரைப் பார்த்தால் எதிரிகள் எரிச்சல் அடைவதற்குக் காரணம், ‘திராவிடக் கொள்கைவாதியாக இருக்கிறாரே?’ என்பதுதான். ‘திராவிடக் கொள்கைவாதிகளை உருவாக்குகிறாரே?’ என்பதுதான் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
மாண்புமிகு உதயநிதியின் இரண்டு போர்க் கருவிகள் என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு :- “திராவிட இயக்கம் காலம்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. அதனால்தான் அது எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த பிறகும் உயிர்ப்போடு இருக்கிறது.
‘கடைசிச் சூத்திரன் இருக்கும்வரை எனது தொண்டு தொடரும்’ என்றார்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். ‘நமக்கான தேவை இன்னும் பல ஆண்டுகளாக இருந்து கொண்டே இருக்கும்’ என்றார் பேரறிஞர் அண்ணா. ‘ஒரு கருணாநிதி போனாலும் ஆயிரம் கருணாநிதிகள் வந்துகொண்டே இருப்பார்கள்’ என்றார் தமிழினத் தலைவர் கலைஞர். இந்தச் சொற்களுக்குப் பின்னால் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல; உண்மையான அக்கறை ஒன்று இருக்கிறது. ‘என்னோடு இது முடியாது, எனக்குப் பிறகு வருபவர்களும் இதைத்தான் செய்ய வேண்டும், செய்தே ஆக வேண்டும்’ என்பதுதான் அது!
தந்தை பெரியாரின் சமூகநீதியை - பேரறிஞர் அண்ணாவின் மொழி, இனமான உணர்வை – தமிழினத் தலைவர் கலைஞரின் மாநில மேம்பாட்டை அப்படியே துளி சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி வருகிறார் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர்கள் காலத்தில் இருந்ததைவிட இன்னும் மேம்பட்ட நிலைக்கு, உன்னதமான நிலைக்கு உயர்ந்து நிலைநிறுத்திவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
கட்சியையும் முதன்மை ஆட்சியையும் ஒரே நேரத்தில் ஒன்றுபோல இடத்துக்குக் கொண்டுவந்து நிலைநிறுத்துவது சாதாரண சாமான்ய செயல் அல்ல. தான் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் வென்று காட்டியதும், ஆட்சி அமைத்த நான்காண்டு காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்தியது மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் மகத்தான சாதனைகள் ஆகும். இதே வழித்தடத்தில் கொள்கை – நிர்வாகத் திறன் ஆகிய இரண்டிலும், வெற்றிக்குரியவராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்.
ஆகஸ்ட் 7 – தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவுற்ற நாள். அந்த நாளில் தலைவர் கலைஞருக்குப் பிடித்த இரண்டு செயல்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் செய்துள்ளார்கள்.
* திராவிட இயக்க இதழியல் வரலாற்றில் 250–க்கும் மேற்பட்ட இதழ்கள் நமது இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டன என்பார் திராவிடவியல் அறிஞர் க.திருநாவுக்கரசு. இதழ் நடத்தினார்கள். கொள்கையைப் பரப்பினார்கள். இந்த வரிசையில் வரலாற்றின் அடுத்த கட்டப் பாய்ச்சலை மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். ‘கலைஞர் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம்’ என்பது தான் அந்தப் பாய்ச்சல் ஆகும். திராவிட இயக்கம் இதழியலுக்குத் தேவையான மாணவர்களைத் தானே தயார் செய்து கொள்ளும் திட்டம் இது. ‘முரசொலி’ நாளிதழும், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியும் இணைந்து இதனை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
‘நடுநிலை’ என்ற போர்வையில் குறுக்குச்சால் ஓட்டிக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ‘கலைஞர் மாணவப் பத்திரிக்கையாளர்கள்’ என்ற அடைமொழியோடு ஒரு படை கிளர்ந்தெழுவது காலத்தின் கட்டாயம் ஆகும். நீதிக்கும் நீதிக்குமான போரில் ‘நடுநிலை’ வகிப்பது போலித்தனமானது. நீதியின் பக்கமாக நிற்பதுதான் சரியான நடவடிக்கை ஆகும். அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்க நினைக்கிறார் துணை முதலமைச்சர் அவர்கள்.
* திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பேரறிஞர் அண்ணாவால் உருவானது. ‘எனது தம்பிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள்’ என்பார் அண்ணா. அப்படித்தான் அவர்களை உருவாக்கினார்கள். அதேபோன்ற இளம் ஆய்வாளர்களை உருவாக்குவதற்கு ‘கலைஞர் நிதி நல்கைத் திட்டம்’ தொடங்கி இருக்கிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்.
திராவிட இயக்கம் குறித்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு ஒரு லட்சம் பணம் வழங்கப்படுகிறது. அந்த ஆய்வேட்டை வழங்கியதும், அது ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஏராளமான ஆய்வாளர்கள் கிடைப்பார்கள். ஆய்வுகளுக்கு இடமளிக்கும்.
கலைஞர் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டமும், இளம் ஆய்வாளர்களுக்கான கலைஞர் நிதி நல்கைத் திட்டமும் திராவிட இயக்கத்தின் போர்க்கருவிகளை உற்பத்தி செய்யும் திட்டங்கள் ஆகும். மாண்புமிகு துணை முதலமைச்சரைப் பார்த்தால் எதிரிகள் எரிச்சல் அடைவதற்குக் காரணம், ‘திராவிடக் கொள்கைவாதியாக இருக்கிறாரே?’ என்பதுதான். ‘திராவிடக் கொள்கைவாதிகளை உருவாக்குகிறாரே?’ என்பதுதான்.
சாதாரண இடத்தை நிரப்புவதற்காக வந்தவர் அல்ல மாண்புமிகு உதயநிதி. அவர் தமிழினத்தை முன்னேற்றுவதற்காக வந்தவர். இலட்சக்கணக்கான இளைஞர்களை திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் கொண்டு வந்ததும், அவர்களைக் கொள்கை வாதிகளாக வளர்த்தெடுக்கும் பாசறைக் கூட்டங்கள் நடத்தியதும், தினந்தோறும் அறிவூட்டும் ‘முரசொலி’ நாளிதழில் பாசறைப் பக்கம் தயாரித்து வருவதும், இருநூறுக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களை உருவாக்கியதும்தான் மாண்புமிகு உதயநிதி அவர்கள் திராவிட இயக்கத்துக்கு ஆற்றும் பெரும் பணியாகும். அதன் தொடர்ச்சியாக திராவிட மாணவப் பத்திரிக்கையாளர்களை, திராவிட இளம் ஆய்வாளர்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.
பெருமையும், புகழும் செய்யும் செயலால் கிடைக்கிறது. அந்த வகையில் தனது செயலால் பெருமையும் புகழும் அடைகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்.