
முரசொலி தலையங்கம் (08-08-2025)
ஓராயிரம் முறை சொல்வோம்!
‘பாவி' சண்முகமாக இருந்து, 'காவி' சண்முகமாக ஆகி இருக்கும் சி.வி. சண்முகத்தின் உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரைப் பயன்படுத்தக் கூடாதாம். 'ஸ்டாலின்' என்ற பெயரைப் பார்த்தாலே பயம் வருகிறது பழனிசாமி கூட்டத்துக்கு. அதனால் சண்முகத்தை இறக்கி விட்டு வழக்குப் போட வைத்தார். ஆனால் அது உச்சநீதிமன்றத்தில் செல்லுபடி ஆகவில்லை. 'இப்படி ஒரு அபத்தமான வழக்குப் போட்டதற்காக இருபது லட்சம் ரூபாய் அபராதம் போடட்டுமா?' என்று கேட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, 'ஐயோ பாவம்' பார்த்து பத்து லட்சம் ரூபாயை அபராதமாகவே போட்டு விட்டார்கள். இதன்பிறகாவது பழனிசாமி - சண்முகம் கூட்டத்துக்கு உறைக்குமா எனத் தெரியவில்லை.
தமிழ்நாடு அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
தமிழ்நாடு அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்கு எதிராக அரசியல் வன்மத்தோடு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சி.வி.சண்முகத்தின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தி.மு.க. மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

“உங்களுடன் ஸ்டாலின்' திட்டம், பொதுமக்கள் சார்ந்த திட்டம் என்றும், இதுவரை 9 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்ந்த நபர் முன்பு அமைச்சராக இருந்து 25 திட்டங்களை அப்போதைய முதலமைச்சர் பெயரில் செயல்படுத்தியவர் என்றும், தற்போது அவர் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்றும் அரசு தரப்பிலும் தி.மு.க. தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டன. இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் திட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
“அரசியல் தலைவர்கள் பெயரில் திட்டங்கள் செயல்படுத்துவது நாடு முழுவதும் பின்பற்றப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சி- களின் தலைவர்கள் பெயரிலும் இதுபோன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், ஒரு அரசியல் தலைவரை மட்டும் தேர்ந்தெடுத்து மனுதாரர் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், இது அவரது அரசியல் உள்நோக்கத்தை காட்டுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
மனுதாரர் சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு மனுத்தாக்கல் செய்து இருப்பதாகவும், இது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத் தொகையை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்தத் தவறினால் சி.வி.சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சூடு,சொரணை இருந்தால் சண்முகம், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
•உங்களுடன் ஸ்டாலின்
•நலம் காக்கும் ஸ்டாலின்
•ஓரணியில் தமிழ்நாடு - ஆகிய முன்னெடுப்புகள் கோடிக்கணக்கான மக்களை நாள்தோறும் சென்றடைந்து வருகிறது. இந்த மூன்று முன்னெடுப்புகளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிக முக்கியமானது.
அரசுக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை அதிகரித்து விட்டது உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய திட்டங்கள். கோரிக்கை வைத்தால் உடனே நிறைவேறும் என்று மக்கள் உறுதியாக நம்பி வந்து மனுக்களைக் கொடுக்கிறார்கள். இந்த நல் நம்பிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள கடுப்பாகும். பழனிசாமியிடம் மனுக் கொடுத்தால் குப்பைக்குப் போகும்என்பதை அறிந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதனால்தான் அவரைத் தோல்வி அடையச் செய்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற முன்னெடுப்பு மூலமாகத் தேர்தலுக்கு முன் பெற்ற மனுக்களை முதலமைச்சர் ஆன 100 நாட்களுக்குள் தீர்த்து வைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 'முதல்வரின் முகவரி' என்ற திட்டத்தைத் தொடங்கி, அதற்காக தனி அலுவலகத்தை உருவாக்கி அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார் முதலமைச்சர் அவர்கள். 'நீங்கள் அரசுக்கு அனுப்ப வேண்டாம், நாங்களே உங்கள் வீட்டுக்கு அருகில் வந்து மனுக்களைப் பெற்றுக் கொள்கிறோம்' என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் “உங்களுடன் ஸ்டாலின்' என்ற முகாம்கள் ஆகும்.
ஒரு நியாயமான எதிர்க்கட்சி, ஒரு நல்ல எதிர்க்கட்சி இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்க வேண்டும். 'மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தாருங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும். மாறாக, 'மக்களிடம் மனு வாங்குவதே தவறு' என்ற உள்நோக்கத்தோடு ஒரு வழக்கை தாக்கல் செய்கிறது அ.தி.மு.க. என்றால் அவர்களது நோக்கம் 'ஸ்டாலின்’ என்ற பெயர் மட்டுமல்ல; மக்களின் கோரிக்கைகள் நிறைவேறிவிடக் கூடாது என்ற கெட்ட எண்ணமும் அதிகமாக இருக்கிறது. அதன் அடையாளம்தான்இந்த வழக்கு ஆகும்.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைச் சூட்டக்கூடாது என்று சொல்வதற்கான அருகதை அ.தி.மு.க.வுக்கு இல்லை. எல்லாத் திட்டத்துக்கும் ‘அம்மா’ பெயர் சூட்டியவர்களுக்கு இதைச் சொல்ல அருகதை இல்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் 'அம்மா' பெயரை நீக்காமல் வைத்திருப்பதும் இன்றைய முதலமைச்சரின் பெருந்தன்மை ஆகும். அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பழனிசாமிக்கு இல்லை.
நாம் ‘ஸ்டாலின்' என்ற பெயரை ஓராயிரம் முறை சொல்வோம்!








