
2021 ஆம் ஆண்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தார்கள். நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் திராவிட நாயகன். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தார்.
‘திராவிட மாடல் ஆட்சி அமைந்தால் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயண வசதி செய்து தருவோம்’ என்று சொன்னார். ஆட்சி அமைத்ததும் உடனடியாக அதற்கான கையெழுத்துப் போட்டார். பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லை என்ற நிலையை உருவாக்கினார். இதனை ‘ஸ்டாலின் பஸ்’ என்றே மகளிர் அழைத்தார்கள்.
‘‘மகளிருக்கு மாதம் தோறும் கலைஞர் பெயரில் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவோம்’’ என்று சொன்னார். 1.31 கோடி மகளிர் மாதம்தோறும் உரிமைத் தொகை பெறுகிறார்கள். நம்மைப் பார்த்து பல மாநிலங்களில் கொடுக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 லட்சம் பேரை இத்திட்டத்தில் இருந்து நீக்கினார்கள். அதுபோலத் தமிழ்நாடு யாரையும் நீக்காமல், விடுபட்டவர்களையும் சேர்த்தது. இதுதான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு ஆகும். யாருக்கெல்லாம் தேவை என்பதை மனுக்கேட்டு வாங்கி தகுதி இருப்பின் வழங்கிய முதலமைச்சரைத் தமிழ்நாடு பெற்றது. ‘எங்க அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் மாதாந்திர சீர்’ என்றே மகளிர் மகிழ்ந்தார்கள்.
மகளிர் உரிமைத் தொகையை தடுக்கப் பார்த்தார்கள். அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை மாண்புமிகு மு.க.ஸ்டாலின். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 3,000 ரூபாயைக் கொடுக்கச் சொல்லிவிட்டார் முதலமைச்சர். அத்தோடு கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாயும் கொடுக்கச் சொல்லி விட்டார். இதன்படி 1.31 கோடி மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் பிப்ரவரி 13 அதிகாலையிலேயே போய்ச் சேர்ந்தது.
5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்பதல்ல முக்கியம். இத்திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்துக் காட்டினார். அதுதான் முக்கியம்.
‘’தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்பதை நெஞ்சுரத்தோடு மெய்ப்பித்தார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கலின் போது 2.12 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் பணத்தை பொங்கல் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட திராவிட மாடல் ஆட்சி கொடுத்தது. அதாவது இரண்டு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

‘‘பள்ளி மாணவ மாணவியருக்கு காலையில் சூடான, சுவையான உணவு வழங்குவோம்’’ என்று சொன்னார். 19 லட்சம் பிள்ளைகள் காலை உணவை பள்ளிகளில் பெறுகிறார்கள். இது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், உள்ளத்தில் உறுதியையும் அதிகமாக்கி இருக்கிறது. ‘’என் பிள்ளைகள் வீட்டில் கூட சாப்பிடாமல் பள்ளிக்குப் போய்தான் சாப்பிடுகிறார்கள், அந்த உணவுதான் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்’’ என்று எத்தனையோ தாய்மார்கள் பேட்டி அளிப்பதை சமூக ஊடகங்களில் பார்த்தோம்.
‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அனைத்து இளைஞர்களுக்கும் தனித்திறமை பயிற்சி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர். இதன் மூலம் 48 லட்சம் பேர் பயனடைந்து இருக்கிறார்கள். இன்று பல லட்சம் மாணவர்கள் உயரிய பணியிடங்களைப் பெற்று முன்னேறி இருக்கிறார்கள்.
அரசுப் பள்ளியில் படித்து, மேற்கொண்டு கல்லூரிப் படிப்பை படிக்க முடியாதவர்களை மீண்டும் கல்லூரிக்கு வரவழைக்க ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. மாதம் தோறும் 9 லட்சம் மாணவ மாணவியர் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
இதன் மூலமாக கல்வி நிறுவனங்களுக்குள் பெண்கள் வருவது அதிகம் ஆனது. கிராமப்புற மாணவர்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியது. மாண்புமிகு மு.க.ஸ்டாலினை ‘அப்பா’ என்று மாணவிகள் அதிகம் அழைக்கத் தொடங்கியது அதன் பிறகுதான்.
அரசு ஊழியர்களின் 22 ஆண்டு காலக் கோரிக்கை பழைய ஓய்வூதியம் ஆகும். கழக ஆட்சியில் இத்திட்டம் செயல் வடிவம் பெறும் என்று சொன்னார் தலைவர்.அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் மனம் மகிழ வைத்த ஆட்சி நமது ஆட்சி.
கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 2022 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசிற்கு இணையாக உயர்த்தி வழங்கியதோடு, ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கியது திராவிட மாடல் ஆட்சி.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 01.10.2025 முதல் அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியது.
நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள், விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால், 1 கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 இலட்சம் ரூபாயும், ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கியது.
எத்தகைய சூழலில் இவற்றைச் செய்து தந்தார் முதலமைச்சர் அவர்கள்? தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு ஆண்டு தோறும் குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி குறைக்கப்படுகிறது.அந்த நிதியை முறையாக விடுவிப்பது இல்லை. ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள GST மாற்றங்களால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்து வருகிறது. இத்தகைய சூழலிலும் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்து கொடுத்தார்கள்.
இவை அனைத்துக்கும் மேலாக சாதிக் கலவரம் இல்லை. மதக் கலவரம் இல்லை.கும்பல் வன்முறை இல்லை. தொடர் வன்முறைகள் இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கைச் சீரமைத்து அமைதியான நாடாக தமிழ்நாட்டை ஆக்கிக் காட்டினார். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?






