முரசொலி தலையங்கம் (06-09-2025)
தென் மாவட்டங்களின் தொழிற்புரட்சி!
தனது ஆட்சிக்கு ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று அடையாளம் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற உள்ளடக்கத்தையும் சொன்னார். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டத்து வளர்ச்சி என்று விளக்கமும் அளித்தார். இந்த உன்னதமான நோக்கம் தினந்தோறும் நிறைவேறிவரும் காட்சிகளைத்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
பொதுவாக சென்னையைச் சுற்றி, அல்லது பெரிய நகரங்களைச் சுற்றி தொழிற்சாலைகள் அமையும் சூழலை மாற்றி, அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்து விதமான தொழிற்சாலைகளையும் கொண்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாக, அதிகத் தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக, அதிலும் குறிப்பாக அதிக பெண் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இதற்குக் காரணம், ‘அனைத்து மாவட்ட வளர்ச்சி’ என்ற முதலமைச்சரின் நோக்கம் ஆகும். ‘சிப்காட்’ தொழில் வளாகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டு வருவதும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான்.
இந்த வரிசையில் கடந்த 4 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த திட்டங்கள் தென் மாவட்டங்களின் தொழிற்புரட்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளன.
தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த நிறுவனங்களின் மொத்த மதிப்பு 32,554 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலமாக 49 ஆயிரத்து 845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான்கு நிறுவனங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இதன் மொத்த மதிப்பு 1,230 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலமாக 3,100 பேர் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். மூன்று நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (4.8.2025) தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் துறையின் சார்பில் 32,554 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 49,845 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. மேலும், 1,230 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 முடிவுற்ற திட்டங்களின் வணிக உற்பத்தியினை தொடங்கி வைத்து, மூன்று நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது மின்சார கார் உற்பத்தியை தூத்துக்குடியில் தொடங்கி இருக்கிறது. 18 மாதங்களுக்கு முன் இந்த நிறுவனத்துக்கான அடிக்கல்லை முதலமைச்சர் நாட்டினார். இப்போது அந்த நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்கி விட்டது. 1300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின் வாகனங்களை தயாரிக்கப் போகிறார்கள். இந்தியாவின் இரண்டாவது முழு மின்வாகன உற்பத்தித் திட்டம் இதுதான்.
“இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது! தமிழ்நாடுதான், இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் ‘கேப்பிட்டல்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன்! சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட்! திருப்பெரும்புதூரில் எப்படி முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டதோ, அதேபோன்று, இன்றைக்கு தூத்துக்குடியில் முதல் மின்வாகன உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது! இதனால், தூத்துக்குடி மட்டுமல்ல; தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மிகப் பெரிய தொழில் பகுதியாக வளர்ச்சியடையும். அதனால், உறுதியோடு சொல்கிறேன்; இந்நாள் தென் மாவட்டங்களின் ஒரு பொன்னாள். இதுதான், தமிழ்நாட்டின் ‘Ease of doing Business’-க்கு அத்தாட்சி” என்று மாண்புமிகு முதலமைச்சர் சொல்லி இருப்பது வெறும் வார்த்தைகள் அல்ல. வருங்காலத்தில் நாம் காணப்போகும் காட்சிகள் ஆகும்.
முதலமைச்சரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட டிப்ளமோ மாணவர்கள் இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்களைத்தான் இந்த நிறுவனம் அதிகமாக வேலைக்கு எடுக்க இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்துள்ளது. தூத்துக்குடியில் நியோ டைட்டல் பார்க், மதுரையில் டைட்டல் பார்க், நெல்லையில் எரிசக்தித் திட்டங்கள், விருதுநகரில் ஜவுளி பூங்கா, தூத்துக்குடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. தூத்துக்குடியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக அரசு வளர்த்தெடுத்து வருகிறது.
கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் நான்கு முக்கியமான அறிவிப்புகளையும் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா, கப்பல் கட்டுமான நிறுவனம், ஏற்றுமதி மையம், நெல்லையில் உணவு பதப்படுத்துதல் மண்டலப் பிரிவு ஆகிய அறிவிப்புகளைச் செய்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இவையும் இணைந்தால் தென் மாவட்டத்தில் தொழிற்புரட்சியானது நிச்சயம் நிகழும்.
உலகளாவிய முதலீட்டில் உள்ளூருக்கான முழுமையான வளர்ச்சி என்கின்ற திராவிட மாடல் அரசின் நோக்கம் நிறைவேறி வரும் காட்சியாக இதனைச் சொல்லலாம்.