
திருவண்ணாமலை கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 1439 மாணவர்களுக்கு அமைச்சர் கோ.வி.செழியன், பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் கோ.வி.செழியன்,”தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்பட்டது. தற்போது இக்கல்லூரியில், மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் படித்து வருகிறார்கள்.
இதற்கு காரணம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆகியோர் கல்விக்காக வகுத்த திட்டங்கள்தான். திராவிட மாடல் அரசு கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டத்தினால், தற்போது அதிக அளவில் மாணவிகள் உயர்கல்விக்கு செல்கிறார்கள்.
இந்தியாவிலேயே இன்று உயர்கல்வியில் பெண்கள் அதிக அளவு பட்டப் படிப்பு வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் திட்டம் மட்டுமல்லாது கல்லூரி மாணவர்களுக்காக 7.5% முதல் பட்டதாரி சேர்க்கை என மாணவர் சேர்க்கையை கொண்டு வந்தது அதன் மூலம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை இந்த அரசு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க ஒன்றிய அரசு எந்த தடையை கொண்டு வந்தாலும் அதை உடைத்து மாணவர்களுக்கு உயர்கல்வி தருவது தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் தலையாய கடமையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.








