நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. மேலும் நாடாளுமன்றத்திற்குள் அமைதியான வழையில் போராட்டங்களையும் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் ஹல்காம் தாக்குதல்,பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் ஒன்றிய அரசு முடிக்கி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்திற்குள் CISF வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ”பீகாரில் வாக்காளர் திருத்தப் பட்டியல் என்ற பெயரில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அதிகார வரம்புக்கு மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இன்றைக்கு பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது வரும் காலங்களில் நாடுமுழுவதும் நடைபெற வாய்ப்புள்ளது.
வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் இது குறித்து ஒன்றிய அரசு விவாதம் நடத்த மறுக்கிறது. நாடாளுமன்றத்திற்குள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட CISF வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் பெண் உறுப்பினர்களை இழுத்துச் சென்றது கண்டனத்திற்குரியது. CISF வீரர்களை அவைக்குள் அனுமதித்தது யார்?. இது குறித்து ஒன்றிய அரசு விளக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.