தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை (IN2TN) அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டினை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகின்றேன், மகிழ்ச்சியடைகின்றேன். திராவிட இயக்கம் எப்போதும் புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறது. திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் கொண்டு சென்று அவர்கள் பயன்பெற தொடர்ந்து பாடுபட்டுள்ளது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குத் தலைமைதான் டிஜிட்டல் சகாப்தத்தில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டது. அந்த காலகட்டத்தில் துணிச்சலான மற்றும் முற்போக்கான மாநில தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் முதலமைச்சர் அவர்தான்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பள்ளிகளில் கணினி கல்வியை கொண்டு வந்ததுடன், டைடல் பூங்காக்களை நிறுவி இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து ஒளிரச்செய்தார். டாக்டர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதுள்ளதுடன் இன்று நாம் காணும் தகவல் தொழில் நுட்பவியல் முன்னேற்றத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.
டாக்டர் கலைஞர் அவர்களைப் பின்பற்றி, நமது முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், நமது திராவிட மாடல் அரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் புதிய அளவுகோல்களை அமைத்து, முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பாதையை உருவாக்கி வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நமது ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சில குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் முயற்சிகளால், தமிழ்நாடு, நாட்டின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.
"இந்தியாவின் SaaS (Software As A Service) தலைநகரம்" என்று சென்னை பெருமையுடன் அழைக்கப்படுகிறது. முக்கிய ஐடி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் வேகமாக விரிவடைந்து வருகின்றன.
தொழில்துறைக்கு தேவையான திறன் இடைவெளிகளை நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட முன்னெடுப்பு முயற்சிகளின் மூலமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்புடன் மாணவர்களை தமிழ்நாடு அரசு தயார் செய்து வருகின்றது.
டிஜிட்டல் அணுகலை வலுப்படுத்த சென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 2,000 இடங்களில் இலவச வைஃபை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளை விரைவுபடுத்த, நமது முதலமைச்சர் அவர்கள் மே 2023 இல் iTNT மையத்தைத் தொடங்கினார்.
அன்றிலிருந்து, கட்டமைக்கப்பட்ட மாநில அளவிலான புதுமையான மாதிரியை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த மாநாடு மிக முக்கியமான நேரத்தில் நடைபெறுகிறது.
"அறிவுசார் சக்தி மையம், தமிழ்நாட்டை இந்தியாவின் புத்தாக்க தலைநகராக மாற்றுதல்" என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததற்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டை ஒரு புத்தாக்க தலைநகராகவும், அறிவுசார் சக்தி மையமாகவும் மாற்றுவதற்கான தமிழ்நாட்டின் விருப்பங்களை இந்த மாநாடு பிரதிபலிக்கிறது என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நமது ஐடி & டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியபடி, இந்த மாநாடு நமது கண்டுபிடிப்பு பயணத்தில் ஒரு மைல்கல்லை குறிக்கிறது. இது அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதை மட்டுமல்லாமல், அதைப் பாதுகாத்து, அளவிடுவதையும் மற்றும் வணிகமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு ஆராய்ச்சியாளர்கள், தொடக்க நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு அறிவுசார் சொத்து விழிப்புணர்வை மேம்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன். இது அறிவுசார் சொத்துரிமையை படைப்பு மற்றும் பொருளாதார சொத்தாகக் கருதும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்க உதவும். தமிழ்நாட்டின் ஏராளமான அறிவுசார் சொத்து அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் இந்த மாநாட்டில் ஒரு வாய்ப்பை பெறலாம்.
மிக முக்கியமாக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி தொழில் நிறுவனங்கள், உலகளாவிய மையங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. இந்த கூட்டாண்மைகள் வலுவான தொடர்புகளையும் துடிப்பான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்க உதவும், இது கூட்டு உருவாக்கம், நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
தமிழ்நாட்டில் ஆழ்நிலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நிதியின் முதல் நிதியுதவியை வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த நிதியுதவியை தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகக் கருதுகிறார்.
பல்கலைக்கழகங்களிலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு செல்லவும், ஆராய்ச்சியின் விளைவுகளை உண்மையான மதிப்பாக மாற்றவும் உதவிட தேசிய மற்றும் உலகளாவிய கூட்டாளர்களின் ஆதரவுடன் iTNT ஹப் இந்த முயற்சிகளை வழிநடத்துகிறது. இந்த மாநாடு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் நமது உத்திகளை எவ்வாறு இணைப்பது மற்றும் உலகளாவிய போட்டிக்கு எவ்வாறு தயாராவது என்பதற்கான தெளிவான பிம்பத்தை வழங்கும். தமிழ்நாட்டின் IT பயண வரலாற்றில் இந்த மாநாடு என்றும் நினைவுகூரப்படும்.
புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் நமது மாணவர்கள் துணிச்சலுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். நமது ஆராய்ச்சியாளர்கள் வெளியீட்டைத் தாண்டி, தயாரிப்புகள் மற்றும் தொடக்க நிறுவனங்களை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தொடக்க நிறுவனங்களுக்கு, உங்கள் அறிவுசார் சொத்து உங்கள் சொந்த நன்மையாக இருந்து அதனுடன் வளரட்டும்.
நமது முதலீட்டாளர்களுக்கு, தமிழ்நாட்டில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எளிதாக வணிகம் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பல ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் புத்தமை கதையில் ஆரம்பத்தில் முதலீடு செய்து எங்களுடன் வளர உங்களை அழைக்கிறேன். இந்த மாநாடு தமிழ்நாட்டின் எதிர்காலத்தை புத்தமைகளில் (Innovative) உலகளாவிய தலைவராக வடிவமைப்பது குறித்ததாகும்.
கொள்கை, உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் தலைமை மூலம் இந்தப் பயணத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஒரு புத்தமை சுற்றுச்சூழல் அமைப்புடன் கூடிய தமிழ்நாடு என நாம் ஒன்றாக முன்னேறுவோம். இந்த மாநாடு பெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்"என்று கூறினார்.