இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து உருவாக்கியுள்ள புதிய செயற்கைக்கோளான நிசார் (NISAR - NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்16 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
நிலச்சரிவு, கடலோர அழிவு, பனிக்கட்டிகள் உருகுதல், காட்டுத்தீ, காடுகள் மற்றும் பயிர்களின் அழிவு போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை கண்காணித்து, முன்னேற்பாட்டுச் செயற்பாடுகளுக்காக தகவல்கள் தரும் வகையில் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பை 748 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வரும். 12 நாட்களில் ஒருமுறை அதே பகுதியில் திரும்பி வந்து அதன் மாற்றங்களை பதிவுசெய்யும் திறன் கொண்டது. மேலும், ஒரு முறையில் 240 கி.மீ பரப்பளவை ஒரு ஸ்வீப்பில் (scan) பதிவு செய்யும் திறன் கொண்டது.
3 ஆண்டுகள் ஆயுள் கொண்ட இந்த செயற்கைகோளுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால் பேரிடர்கள் குறித்து முன்னரே அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.