நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நேற்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் விவாதங்களை முன்வைத்து பேசி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ” பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மணி நேரம் கழித்துதான் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது எவ்வளவு பெரிய வேட்கக்கேடானது. மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வியை இது காட்டுகிறது. இதற்கு யார் பொறுப்பேற்க போகிறீர்கள்?.
இந்த தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார். பிறகு அவரது பயண திட்டத்தை முடித்துக் கொண்டு உடனே நாடுதிருப்பினார். நாங்கள் எல்லோரும் பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ பீகாருக்கு தேர்தல் பேரணிக்கு சென்றார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. ஆனால் உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டுமே உள்ளது. இதை நாடு பார்த்துக் கொண்டு இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட கர்னல் சோஃபியா குரேஷியை அவமதித்த மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை கண்டித்து ஒரு வார்த்தை கூட பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசவில்லை. பஹல்காம் தாக்குதலின் போது தனது உயிரைக் கொடுத்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றிய குதிரை ஓட்டி அதில் ஷா பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.
சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர்கள் ஜம்மு காஷ்மீர் மக்கள். இவர்கள் பற்றி ராஜ்நாத் சிங் பேசவில்லை. இந்தியாவை ஒருபோதும் உங்களால் பிளக்கவோ, வெளுக்கவோ முடியாது.
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்துரையும், சோழர்களின் போரையும் ஒப்பிட்டு பேசினார். சோழர்கள் தொடங்கிய போரை அவர்களேதான் முடித்தார்கள். ஆனால் மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்கா முடித்து வைத்தாக 25 முறை அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?” என தெரிவித்துள்ளார்.