தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான- புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்தில் பல வெற்றிகளைப் பெற்று சாதனைகள் புரிந்து தேசிய அளவில் தமிழ்நாடு முதல் இடம் என்னும் பெருமையை நிலைநாட்டியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, 'இந்தியா டுடே' பத்திரிகையின் இயக்குநர் ராஜ் செங்கப்பா அவர்கள், ‘இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளைக் கணித்ததாகவும், அதில் ஒட்டு மொத்த செயல் திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் அவர்கள், ‘இந்தக் கடிதத்தைப் படித்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; இது தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பெருமை அல்ல, ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமையாகும். தமிழ்நாட்டிற்குக் கிடைத்த சிறப்பாகும்’ என்று 29.11.2021 அன்று சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குறிப்பிட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் 23.11.2021 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு மாநாட்டில், ‘தொழில் நிறுவனங்கள் நம் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு ‘நிலம்’ கையிருப்பு மிகப்பெரிய பங்காற்றுகிறது. அண்மையில் வெளிவந்த ஒன்றிய அரசினுடைய மாநிலங்களுக்கான IPRS (Industrial Park Rating System) தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அறிவித்திருக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமை. நாம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டிருக்கிறது’. என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்.
இந்தியா டுடே 2020 ஆய்வறிக்கையில்
2021 மே திங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்பதற்கு முன் தமிழ்நாட்டிலிருந்த முந்தையஆட்சியில் தமிழ்நாடு எந்த அளவில் பின்தங்கி இருந்தது என்பதனை 7.12.2020 நாளிட்ட, ‘இந்தியா டுடே ஆய்வு அறிக்கை’ புள்ளி விவரங்களோடு தெளிவுபடுத்தி இருந்தது, இந்திய அளவில் 20 மாநிலங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தமிழ்நாடு,
* உள்கட்டமைப்பில் 20 வது இடம்- கடைசி இடம்
* ஐந்து ஆண்டுகளின் செயல்பாட்டில் 19 வது இடம்
* விவசாயத்தில் 19 ஆவது இடம்
* சுற்றுலாவில் 18 ஆவது இடம்
* உள்ளடக்கிய வளர்ச்சியில் 18 ஆவது இடம்
* தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14 ஆவது இடம்
* ஆட்சி நிர்வாகத்தில் 12 ஆவது இடம்
* தூய்மையில் 12 ஆவது இடம்
* சுகாதாரத்தில் 11 ஆவது இடம்
* கல்வியில் 8 ஆவது இடம்
என அன்று நிலவிய தமிழ்நாட்டின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டியது இந்தியா டுடே ஆய்வறிக்கை.
இந்தியா டுடே 2025- ஆய்வறிக்கையில்
‘இந்தியா டுடே ஆய்வறிக்கை 13.2.2025 அன்று வெளியிட்ட, ‘’இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக் கணிப்புகள்’’ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா டுடே பத்திரிகையின் இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிடும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஓய்வில்லா உழைப்பும் அந்த உழைப்பு தந்திருக்கின்ற தமிழ்நாட்டின் மாபெரும் முன்னேற்றங்களையும் ஒவ்வொருவரும் தெளிவாக உணர முடியும்.
சி வோட்டர் நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குநரும் ஆன யஷ்வந்த் தேஷ்முக் அவர்கள் சி- வோட்டர் கருத்துக் கணிப்பு அறிக்கைகளை வெளியிட்டுப் பேட்டி அளித்த போது,
‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலமான தலைவராக இருக்கிறார். தொடர்ச்சியாக அவர் 5 டாப் முதலமைச்சர்களின் பட்டியலுக்குள் இருக்கிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுத்தாலும், இந்த 5 டாப் முதலமைச்சர்களின் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறார். இது சாதாரண விஷயம் இல்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பொருத்த வரை, அவர் தேசிய அளவில் டாப் முதலமைச்சராகவும் இருக்கிறார். மாநிலத்திலும் அவரைச் சிறந்த முதலமைச்சராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
திராவிட அரசியல் - தேசியவாத அரசியல் ஆகியவற்றைத் தி.மு.க. மிக அழகாகக் கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ - என்று பாராட்டினார்
இப்படி, இந்தியா டுடே 2020 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையுடன் அண்மையில் 13.2.2025 அன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை ஒப்பிடுவதன் மூலமும், ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள் படியும் பல வழிகளில் தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களைவிட மிகவும் சிறந்து விளங்குவதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
இந்தப் பாராட்டு மட்டும் அல்ல; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிர்வாகத் திறமையை ஒன்றிய அரசின் பல்வேறு அறிக்கைகளும் பாராட்டியுள்ளன. சான்றோர்களும் புகழ்ந்துள்ளனர்.
ஒன்றிய அரசின் நிதிஆயோக் அறிக்கை
2023-2024ஆம் ஆண்டிற்கான, ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் குறித்த நான்காவது ஆய்வறிக்கையை 2024, ஆகஸ்டு திங்களில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது என்று கூறிப் பாராட்டியது.
அதே அறிக்கையில், காலநிலைமாற்றம், சுற்றுச் சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் சிறப்பாகச் செயலாற்றி தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை
இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி குறித்த ஆய்வேடு மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு இந்தியாவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது என்று பாராட்டியது.
ஒன்றிய அரசின் நிர்யாத் ஆய்வறிக்கை
ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாடு ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கினை, அதாவது, 22.58 சதவீதத் துணிகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்று பாராட்டியது.
தேசிய இறக்குமதி, ஏற்றுமதி ஆண்டாய்வு அறிக்கை
2022-2023 ஆம் ஆண்டிற்கான தேசிய இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில், இந்திய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் 16.19 பில்லியன் அமெரிக்க டாடலர் என்றும்; இதில், தமிழ்நாடு மட்டும் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்றும் அறிவித்துப் பாராட்டியது.
தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
2022-2023 ஆம் ஆண்டிற்கான தோல் பொருள்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு 43.20 சதவீத தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்று பாராட்டப்பட்டது.
இந்திய உயர்கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை
அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) அறிக்கையின்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரி 26 சதவீதம் என்பதை விட உயர்ந்து 51.3 சதவீத மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று தமிழ்நாடு இந்திய அளவில் இன்று முதலிடம் பெற்றுள்ளது.
மாநிலத் திட்டக்குழு அறிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைத் திட்டங்களில் ஒன்று புதுமைப்பெண் திட்டம். அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து உயர்கல்வியில் சேரும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினால் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநிலத் திட்டக் குழு தனது ஆய்வின்மூலம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை
நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களால் 31.1.2025 அன்று 2024-25ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''பாரம்பரிய தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்துவரும் சூழலில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38 சதவீத பங்களிப்பையும், இந்தியாவின் மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47 சதவீத பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது. தோல் பொருள்கள் உற்பத்தித் துறையில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது'', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. அமைப்பின் 2024-ஆம் ஆண்டுக்கான சர்வதேச பணிமுனைப்புக் குழு விருது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவச் சேவைகள்அளித்து வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் 79வது பொதுச்சபையில் சர்வதேசப் பணிமுனைப்புக் குழு விருது United Nation Interagency Task Force Award 25.9.2024 அன்று அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஓய்விலா உழைப்பிற்கு இது ஓர் உலக அங்கீகாரம் !
ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் பாராட்டு
2024-25 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 9.69 சதவீத உண்மை வளர்ச்சி வீதத்துடன் (Real Economic Growth Rate) இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் இது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் ஆகும்.
2011-12 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பின்படி 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP), 2024-25ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது என ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்குமுன், 2017-18ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59 சதவீதமாக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குறைந்த பட்சமாக 0.07 சதவீதம் எனப் பதிவாகியது. இக்காலகட்டத்தில் பல மாநிலங்களில் வளர்ச்சி இறங்கு முகமாக இருந்தன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது எனக் குறிப்பிட்டு பாராட்டப்பட்டது.
சென்னைப் பொருளியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர். கே.ஆர்.சண்முகம் அவர்கள், 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சியினைத் தமிழ்நாடு எய்தி வருவதாகத் தெரிவிக்கிறார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7சதவீதம் என்ற வளர்ச்சி வீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டால். 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சில நாள்களுக்கு முன் ஒன்றிய அமைச்சர் பாராட்டு
புது டெல்லி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி அவர்கள் கடந்த 21.7.2025 அன்று, ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், 'தேசிய அளவிலான தனிநபர் வருமானம் ரூ. 1,14,710 என்பதை விட தமிழ்நாடு ரூ. 1,96,309/- என உயர்ந்து தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது' என அறிவித்துப் பாராட்டியுள்ளார்.
நான்கு ஆண்டுகளில் இவை எல்லாம் எப்படிச் சாத்தியமானது என்பதை ஆராயும் இடத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மெய்வருத்தம் பாராது - கண்துஞ்சாது- பசி நோக்காது - பிறர் கூறும் குறைகளுக்கு அஞ்சாது - கருமமே கண் எனக் கொண்டு - அல்லும் பகலும் அயர்வின்றி உழைப்பதினால்தான், தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்பது உறுதியாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனால் தான், மக்களின் முழு ஆதரவையும்ப் பெற்று நாட்டிலேயே சிறந்த முதலமைச்சராகத் திகழ்கிறார்.