மு.க.ஸ்டாலின்

“ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்! எண்ணமெல்லாம் உங்களைக் குறித்தே உள்ளது!” : முதலமைச்சர் உருக்கம்!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழத்துச் செய்தியை அமைச்சர் அன்பில் மகேஸ் வாசித்தார்.

“ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்! எண்ணமெல்லாம் உங்களைக் குறித்தே உள்ளது!” : முதலமைச்சர் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழத்துச் செய்தியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாசித்தார்.

வாழ்த்துச் செய்தி பின்வருமாறு,

இந்த இனிய விழாவில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர்களுக்கு நானே நேரில் பணிநியமன ஆணைகள் வழங்கவேண்டும் என ஆவலாக இருந்தேன். ஆனால், சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு கூறிய அறிவுரையின் காரணமாக, இந்த விழாவில் பங்கேற்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது. நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலாமல் போனாலும் எனது எண்ணமெல்லாம் உங்களைக் குறித்தே உள்ளது.

பள்ளிகள் என்ற சமுதாயத்தின் அறிவு நாற்றங்கால்களைப் பாதுகாத்து, பேணி வளர்த்து எதிர்காலத்திற்கான சிந்தனை வளமிக்க தலைமுறையை உருவாக்கும் ஆகச்சிறந்த பணிதான் ஆசிரியர் பணி. ஆசிரியர்களை முன்மாதிரி ஆளுமைகளாகக் கொண்டுதான் மாணவர்கள் தங்களது எதிர்காலத்திற்கான இலக்குகளையும், கனவுகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அத்தகைய மகத்தான ஆசிரியர் சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குமான உறவு என்பது அரசியலையும் தாண்டிய நெருக்கத்தையும், பிணைப்பையும் கொண்டதாகும். முத்தமிழறிஞர் கலைஞர் ஆசிரியர்கள் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பையும், பரிவையும், ஆசிரியர் சமூகம் என்றென்றும் மறக்காது.

அதே வழியில் நமது “திராவிட மாடல்” அரசும் ஆசிரியர்களின் நலம் பேணி, அதன் மூலம் மாணவச் செல்வங்களின் அறிவு வளம் பேணும் பணியை ஆற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பள்ளிகளில் காலியாக உள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்படுகின்றன.

“ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்! எண்ணமெல்லாம் உங்களைக் குறித்தே உள்ளது!” : முதலமைச்சர் உருக்கம்!

பிற்போக்குத்தனமான, அறிவியல் அணுகுமுறைகளுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய நெருக்கடிக்கு இடையிலும், பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதுமையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், மாவட்டம்தோறும் மாதிரிப் பள்ளிகள், 28 மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான தகைசால் பள்ளிகள், மாணவச் செல்வங்களின் கலை ஆற்றலை இனம் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காகப் பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்குதல்;

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 519.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் 455.32 கோடி ரூபாய் செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் எனப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இவற்றில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்பு பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர்களுக்கென நலம் நாடி செயலி வடிவமைக்கப்பட்டுத் தக்க சிறப்புக் கல்வி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களின் மூலம் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய கற்பித்தல் முறையாகப் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவது மிகச் சிறப்பான ஒரு திட்டமாகும்.

ஆசிரியப் பெருமக்களின் தேவைகளை உணர்ந்த அரசு இந்த அரசு. அதனால், 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு 81 கோடி ரூபாய் செலவில் கைக்கணினிகள் (Tablet), அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இணைய வழியில் EMIS மூலம் நடத்துதல்;

14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்ய ஆணை, கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன்மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகனார் பெயரில் விருது, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்விச் செலவினத்திற்கான உதவித் தொகை 50,000 ரூபாயாக உயர்வு;

ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான திட்டம் என, ஆசிரியர்களுக்கான திட்டங்களையும் குறைவின்றி நிறைவேற்றி வருகிறோம்.

மாணவச் செல்வங்கள், ஆசிரியப் பெருமக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பட்டியல் மிக நீளமானது. அவற்றில் சிலவற்றை மட்டுமே தலைப்புச் செய்திகளாக சுட்டிக்காட்டியுள்ளேன்.

மாணவர் நலனையும், ஆசிரியர் நலனையும் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இரண்டு கண்களெனப் போற்றிச் செயலாற்றி வருகிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இன்னும் வளரும்… தொடரும் என்று கூறி, புதிதாக பணியேற்கும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories