தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. இதனால், தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து குழப்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், ”2026 சட்டமன்ற தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு நெருக்கடியான தேர்தலாக இருக்கும் என்ற தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துக் கொண்டாலும் இவர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. இதனால், தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து குழப்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி மத சார்பின்மை கூட்டணி அதனை எல்லோரும் சேர்ந்து வலுப்பெற செய்வதும் வெற்றி பெற செய்வதும் எல்லோருக்குமான கடமை.
எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். இதுவரை தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலாக தான் இருந்துள்ளது இனிமேலும் அது போல் தான் நடக்கும். மூன்றாவது அணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை, வருகின்ற தேர்தலும் அப்படித்தான்” என தெரிவித்துள்ளார்.