தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில், "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, திருச்சி சிவா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்கவும், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டு வர வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளவும், திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ம் தேதி தொடங்கியதை குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டு வர மக்களைத் தேடி வீடு, வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளதாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது தி.மு.கவினர் கலந்துரையாடுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள – இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் 2 கோடியே 50 லட்சம் பேரை தி.மு.க உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தி.மு.க உருவாக்கியிருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் தி.மு.கவுக்கு மிகப்பெரிய சொத்து என்றும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகளை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும், அதற்கு பிறகும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ”உறவென விருந்தோம்பல் வழங்கி, ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.