தமிழ்நாடு முதலமைச்சர் .க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.7.2025) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, உரையாற்றியபோது முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம்:-
முதலாவது அறிவிப்பு -
மயிலாடுதுறை பகுதியில், சீரான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்ய, நீடூர் ஊராட்சியில் 85 கோடி ரூபாய் செலவில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு -
சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் தரங்கம்பாடி – மங்கநல்லூர் – ஆடுதுறை சாலை, 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு -
தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் கலந்துகொண்டு,உயிர்த் தியாகம் செய்த, சுதந்திரப் போராட்ட தியாகியான சாமிநாகப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மயிலாடுதுறையில் அவரின் திருவுருவச் சிலை அரசால் நிறுவப்படும்.
நான்காவது அறிவிப்பு -
குத்தாலம் நகரத்தில் பாயும் குத்தாலம் வாய்க்கால் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு -
தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் தாழம்பேட்டை மற்றும் வெள்ளக்கோயில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு -
சீர்காழி நகராட்சிக்கு 5 கோடி ரூபாய் செலவில், புதிய நகராட்சி அலுவலகம் கட்டித் தரப்படும். மீனவர்களைப் பொறுத்தவரையில், சீர்காழி வட்டம், திருமுல்லை வாசல், மீனரங்கதரத்தில் மேல் கல்சுவர், நீட்டிப்பு மற்றும் தூர்வாருதல் பணி மேற்கொள்வது குறித்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மூலமாக ஆய்வு மேற்கொள்ள துறை அமைச்சரின் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில், இந்த மேம்பாட்டுப் பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும்.
ஏழாவது அறிவிப்பு –
சீர்காழி வட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
எட்டாவது அறிவிப்பு -
சீர்காழி நகராட்சியில் இருக்கும் தேர் கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய இடங்களில் இருபுறமும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டுப் பணிகள் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம் நிச்சயம் விரையில் செயல்பாட்டிற்கு வரும்.