முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.7.2025) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, ஆற்றிய உரை.
அழகிய மயில்கள் ஆடும் துறை என்ற காரணத்தால் மயிலாடுதுறை! ஆயிரமானாலும் மாயவரம் ஆகாது! இப்படி பல்வேறு சிறப்புக்குரிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதோடு இந்த மாவட்டத்தின் மருமகன் என்கின்ற உரிமையோடும், உங்களில் ஒருவனாக நான் இங்கே வந்திருக்கிறேன்.
இன்று மட்டும் 48 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பிலான, 47 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 113 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 12 புதிய திட்டங்களுக்கு திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 54 ஆயிரத்து 461 பேருக்கு 271 கோடியே 24 இலட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கயிருக்கிறேன்.
இந்த அரசு விழாவை மிகச் சிறப்பாக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கக் கூடிய, பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, உலக செஸ் வீரர்கள் எல்லாம் பாராட்டிய 44- ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்புப் பெற்றது என்று சொன்னால் மெய்யநாதன் அவர்களுடைய திறமைக்கு அது சான்றாக அமைந்தது!
புதுக்கோட்டை சொந்த மாவட்டமாக இருந்தாலும், பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கருதி, சிறப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அவர்களும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
நேற்று நான் திருவெண்காட்டிலிருந்து மயிலாடுதுறைக்கு வருவதற்கு நான்கு மணி நேரம் ஆனது. வழிநெடுகிலும் கூட்டம்; மயிலாடுதுறை நகர தெருக்களில் நான் நடந்து, மக்களை சந்தித்தபோது இடையில் மழை வந்தது. அதைப் பொருட்படுத்தாமல், மக்கள் என் மேல் அன்பு மழை பொழிந்தது என்னை நெகிழ வைத்தது.
அதேபோல், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரீகாந்த் அவர்களுக்கும், அவருக்கு துணை நின்ற மாவட்ட அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
நம்முடைய திராவிட மாடல் அரசின் இலக்கு, ‘எல்லோருக்கும் எல்லாம்!’ ’அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி!’ அதனால்தான், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து மக்களின் கருத்துகளை கேட்டு கேட்டு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்!
கடந்த 4 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில், நம்முடைய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் ஏழாயிரத்து 420 கோடியில், ஆறாயிரத்து 679 வளர்ச்சிப் பணிகளும், இரண்டாயிரம் கோடியில் நலத் திட்ட உதவிகள் என மொத்தம் ஒன்பதாயிரத்து 537 கோடி மதிப்பிலான திட்டங்கள், உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறையில், வரதாச்சாரியார் பூங்காவில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலை!
தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு அரங்கம் கட்டியிருக்கிறோம்!
சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்திருக்கிறோம்!
ஐநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலைப்பணிகள், குடிநீர் வசதிகள், புதிய கட்டடங்கள் என்று 4 ஆயிரத்து 911 பணிகள் செய்திருக்கிறோம்!
செம்பனார்கோவில், மாதானத்தில் அரசு கால்நடை மருத்துவமனைக் கட்டடம் கட்டியிருக்கிறோம்!
சீர்காழியில் கால்நடை மருத்துவமனை கட்டி அதை பயன்பாட்டிற்கு ஒப்படைத்திருக்கிறோம்!
பூம்புகார் சுற்றுலா வளாகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது!
பூம்புகார் கல்லூரிக்கு வகுப்பறைகள் கட்டும் பணியும், திருவெண்காடு பள்ளிக்கு அடிப்படை வசதிகளும் அமைக்கும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது!
எட்டு நிரந்தர நேரடி நெல் கொள்முதல் கிடங்குகள் அமைத்திருக்கிறோம்!
பத்து உலர் களங்கள் அமைத்திருக்கிறோம்!
நெடுஞ்சாலைத் துறை சார்பில், 261 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைத்திருக்கிறோம்!
பேரூராட்சிகள் துறை சார்பில், 72 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் நடைபெற்றிருக்கிறது!
சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட 7 ஊராட்சிகளில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை முடித்திருக்கிறோம்!
200 கிராமங்கள் பயனடையும் வகையில் 19 மினி பஸ்கள் விடப்பட்டிருக்கிறது!
262 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
பொதுப்பணித் துறை சார்பில், 229 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளுக்கு பல்வேறு கட்டடங்களை கட்டித் தந்திருக்கிறோம்!
இதுமட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களால், இந்த மாவட்டத்தில் உங்களில் எவ்வளவு பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும் என்று சொன்னால்,
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 396 சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்!
18 ஆயிரத்து 961 பேரின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோம்!
ஆயிரத்து 217 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 13 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம்!
காலை உணவுத் திட்டத்தில் 50 ஆயிரத்து 689 மாணவர்கள் சுவையாக - சூடாக - சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்!
நம்முடைய பிள்ளைகள் படிக்க 12 ஆயிரத்து 358 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், 5 ஆயிரத்து 42 மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்!
41 ஆயிரம் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம்!
ஆயிரத்து 238 விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்பு வழங்கியிருக்கிறோம்!
3 ஆயிரத்து 232 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்!
10 ஆயிரத்து 267 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது!
6 இலட்சம் விவசாயிகளுக்கு, 2 இலட்சம் மீனவர்களுக்கு, 26 ஆயிரத்து 882 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கியிருக்கிறோம்!
2 ஆயிரத்து 498 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வழங்க இருக்கிறோம்!
இப்படி ஒவ்வொரு மனிதருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து செய்து தருகிறோம்! நான் கூறிக்கொள்ள விரும்புவது நம்முடைய மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகமாக வாழும் மீனவ மக்களின் நலன் காக்கவும், நம்முடைய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது!
வானகிரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்!
அதுமட்டுமல்ல, இலங்கை சிறையில் வாடும் நம்முடைய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்! தமிழர்கள் மீதோ - தமிழ்நாட்டு மீனவர்கள் மீதோ - சிறிதும் அக்கறையில்லாத ஒன்றிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை தாரைவார்த்தது யார் என்று அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவது ஒன்றிய அரசின் அதிகாரத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் பா.ஜ.க.தான் ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதுவரையில், கச்சத்தீவை மீட்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? குறைந்தபட்சம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்வதையாவது அவர்கள் தடுத்து இருக்கிறார்களா? இல்லை!
படகுகளை மீட்க முயற்சி செய்திருக்கிறார்களா? அதுவும் கிடையாது! சமீபத்தில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன பேசியிருக்கிறார்? “கச்சத்தீவு என்பது கடல் பகுதியில், தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியிருக்கிறார்.
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் என்ன பதில் அளித்திருக்கிறார்? தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதுவரை இல்லை! எங்களுடைய தொடர் கோரிக்கை - பிரதமர் இதில் நேரடியாக தலையிட்டு, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்கிறோம்.
அதற்கு தமிழ்நாடு அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து போராடும் என்பதை மீனவ சகோதரர்களுக்கு நான் உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்துவிட்டு, உங்களுக்கு தேவையானதை கேட்டுவிட்டு, அறிவிப்புகளை நான் செய்யாமல் இருக்க முடியுமா? அப்படி செய்யாமல் நான் போகமுடியுமா? நீங்கள் விட்டாலும், நானாவது மனம்விட்டு போவேனா? முடியாது. அதனால், மாவட்டத்திற்கான எட்டு புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க விரும்புகிறேன்…
முதலாவது அறிவிப்பு - மயிலாடுதுறை பகுதியில், சீரான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்ய, நீடூர் ஊராட்சியில் 85 கோடி ரூபாய் செலவில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு - சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் தரங்கம்பாடி – மங்கநல்லூர் – ஆடுதுறை சாலை, 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் கலந்துகொண்டு, உயிர்த் தியாகம் செய்த, சுதந்திரப் போராட்ட தியாகியான சாமிநாகப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மயிலாடுதுறையில் அவரின் திருவுருவச் சிலை அரசால் நிறுவப்படும்.
நான்காவது அறிவிப்பு - குத்தாலம் நகரத்தில் பாயும் குத்தாலம் வாய்க்கால் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு - தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் தாழம்பேட்டை மற்றும் வெள்ளக்கோயில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு - சீர்காழி நகராட்சிக்கு 5 கோடி ரூபாய் செலவில், புதிய நகராட்சி அலுவலகம் கட்டித் தரப்படும்.
மீனவர்களைப் பொறுத்தவரையில், சீர்காழி வட்டம், திருமுல்லை வாசல், மீனரங்கதரத்தில் மேல் கல்சுவர், நீட்டிப்பு மற்றும் தூர்வாருதல் பணி மேற்கொள்வது குறித்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மூலமாக ஆய்வு மேற்கொள்ள துறை அமைச்சரின் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில், இந்த மேம்பாட்டுப் பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும்.
ஏழாவது அறிவிப்பு – சீர்காழி வட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
எட்டாவது அறிவிப்பு - சீர்காழி நகராட்சியில் இருக்கும் தேர் கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய இடங்களில் இருபுறமும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டுப் பணிகள் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
இந்த அறிவிப்புகள் எல்லாம் நிச்சயம் விரையில் செயல்பாட்டிற்கு வரும். நேற்று சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமை தொடங்கி வைத்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என்று ஆங்காங்கு முகாம்கள் அமைத்து 46 சேவைகளை வழங்குகிறோம்.
தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கே அங்கு சென்று வழங்குவதுதான் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் நோக்கம். இதில் மிக முக்கியமானது என்னவென்று கேட்டீர்கள் என்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - எனது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய தாய்மார்கள், சகோதரிகள் 1 கோடியே 14 இலட்சம் பேருக்கு இதுவரை, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில், தகுதியுள்ள சிலருக்கு கிடைக்கவில்லை என்று கோரிக்கைகள் தொடர்ந்து வந்தது. தகுதியுள்ள யாருக்கும் உரிமைத் தொகை கிடைக்காமல் போய்விடக்கூடாது என்று அதில் நான் கவனமாக இருந்தேன்; உறுதியாக இருந்தேன். இந்தத் திட்டத்தை அறிவித்தவுடன், இதை பார்த்து பயந்து போய் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், இந்தத் திட்டத்தைப் பற்றி அவதூறுகளைப் பரப்பத் தொடங்கி இருக்கிறார்.
அவரே போதும் – இந்தத் திட்டத்தில் எத்தனை சேவை இருக்கிறது – என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் விமர்சனம் என்கின்ற பெயரில், நமக்கு விளம்பரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். அதற்காக நன்றி! ஆனால், இந்தத் திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார். “தேர்தலுக்கு முன்பே ஊர் ஊராகச் சென்று ஒரு பெட்ஷீட்டை போட்டு, உட்கார்ந்து மனு வாங்கினாரே ஸ்டாலின் அதெல்லாம் என்னானது?” என்று அதிமேதாவி மாதிரி பேசுகிறார்.
சொல்கிறேன் - பெட்ஷீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்செல் ஷீட்களாக மாற்றி, ஒர்க் ஷீட்டாக மாற்றி தீர்வு கண்டிருக்கிறோம். அது தெரியாமல் நான்கு வருடமாக குடும்பத்தோடு ஸ்டாலின் இருந்தார் என்று சொல்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டு மக்கள் தான் என்றும் அவர்களோடுதான் இருப்பேன், இருப்பேன், இருக்கிறேன், இருந்தே தீருவேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களுடைய ஸ்டாலின் பொறுத்தவரைக்கும், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்திற்காக வீடு, வீடாக செல்கிறோம் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்திலேயே விசாரித்து பார்க்கட்டும்.
கட்சி பேதம் பார்க்காமல், தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கும் ஆட்சிதான், இந்த ஸ்டாலின் ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும், அ.தி.மு.க. குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கும் சென்றடைகிறது. மறுக்க முடியுமா? அ.தி.மு.க. ஆட்சி செய்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டு நிர்வாகத்தை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி வைத்திருந்தார்கள்.
அதை சரி செய்து ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று அறிவித்தேன். தி.மு.க.வால் ஆயிரம் ரூபாய் தர முடியாது – அந்த ஆட்சி வந்தாலும் தரமுடியாது என்று அப்போதும் சொன்னார் – ஆட்சிக்கு வந்தபிறகும் சொல்கிறார். அவர் அவதூறைப் பரப்பினார். நான் சொன்னேன் - சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று நம்முடைய நெஞ்சில் வாழக்கூடிய கலைஞரின் மகன் நான்! அதை உறுதியாக சொன்னோம்; சொன்னபடி கொடுத்து வருகிறோம்.
மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை சரியாக வங்கி கணக்கில் விழுகிறது. தேதி மாறாமல், நாள் தவறாமல் சரியாக வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, பேருந்தில் கட்டணமில்லாத நம்முடைய விடியல் பயணம் மூலமாக மாதம் 800 ரூபாய்க்கு மேல் மகளிரால் சேமிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு திட்டமும் பெண்களின் பொருளாதார - சமூக விடுதலைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
திராவிட மாடல் அரசின் நான்காண்டு ஆட்சியில், இதுபோல பல திட்டங்களின் பயன்களை என்னால் சொல்ல முடியும். பழனிசாமி தன்னுடைய நான்காண்டு ஆட்சியில் என்ன செய்தார்? இதே மயிலாடுதுறையில், நாம் சிலை அமைத்திருக்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை 2018-ஆம் ஆண்டோடு நிறுத்தியவர்தான் பழனிசாமி.
மாணவர்களுக்கான லேப் டாப் திட்டத்தை நிறுத்தியவரும் அவர்தான். அவர் எனக்கு டாட்டா - பை-பை சொல்கிறாராம். மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே... 2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா - பை-பை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லப் போகிறார்கள். இனி மக்கள் ஒருபோதும் உங்களை நம்பப் போவதில்லை. அட… ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்பத் தயாராக இல்லை.
ஒரு திரைப்பட காமெடியில் வரும் - “அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” அதுபோல அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். இதை தெரிந்துகொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க ஒரு படத்தின் பெயர் உங்களுக்கு தெரியும் - ‘சுந்தரா டிராவல்ஸ்’ மாதிரி ஒரு பஸ் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டார். அந்த பஸ்ஸிலிருந்து புகை வருவது மாதிரி இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும் அவதூறுமாக வந்துகொண்டே இருக்கிறது. மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.
விரக்தியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், தமிழ்நாட்டு மக்களான உங்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கிறார். உங்களை கொச்சைப்படுத்துகிறார்! என்னவென்றால், ஆயிரம் ரூபாய்க்காக ஏமாந்துவிட்டீர்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் தாய்மார்களை பார்த்து பேசுகிறார். மக்கள் ஏமாறவில்லை, பா.ஜ.க.வை நம்பி நீங்கள்தான் ஏமாந்து போயிருக்கிறீர்கள்.
உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டிலிருந்து காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க.வையே டெல்லிக்குச் சென்று அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள். மூன்று கார்... நான்கு கார் என்று மாறி அமித்ஷா வீட்டுக் கதவை தட்டிய
கதையைப் பற்றி தம்பி உதயநிதி தான் முதன்முதலில் பேசினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் - “அமித்ஷா-வின் வீட்டுக் கதவை தட்டினால் என்ன தப்பு?” என்று வெட்கமில்லாமல் கேட்கிறீர்கள்? யாருக்காக தட்டினீர்கள்? உங்கள் குடும்பத்தை ரெய்டிலிருந்து காப்பாற்ற – உங்கள் கட்சியையே அடமானம் வைக்கத்தானே தட்டினீர்கள்?
பா.ஜ.க. கூட்டணியால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தோற்றுப் போனோம் என்று நீங்களும் சொன்னீர்கள் - உங்கள் கட்சிக்காரர்களே வெளிப்படையாக சொன்ன பிறகும், அதே கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே… அதற்குப் பெயர்தான் குடும்பப் பாசமா! உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியையே டெல்லியோடு சதுரங்க வேட்டையில் சிக்கி அடமானம் வைத்துவிட்டீர்கள். உங்களை சொந்த கட்சிக்காரர்களே நம்பாத நிலையில், தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பி ஏமாறத் தயாராக இல்லை!
மக்களைப் பொறுத்தவரைக்கும், “ஸ்டாலின் கையில் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் – சுயநலத்திற்காக எந்த அந்நிய சக்தியையும் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்குள் விடமாட்டார், தடுத்து நிறுத்துவார்” என்று நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்கள். அந்த எதிர்பார்ப்பை - நம்பிக்கையை - உண்மையாக உழைத்து இந்த நான்காண்டு காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன்.
வளர்ச்சியில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்று உங்கள் ஓனரான ஒன்றிய பா.ஜ.க. அரசே சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டை நாங்கள் உயர்த்தி காட்டியிருக்கிறோம்! உறுதியோடு சொல்கிறேன் - அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். திராவிட மாடல் 2.0-வும், இணையற்ற ஆட்சியாக இந்தியாவிலேயே தலைசிறந்த ஆட்சியாகதான் இருக்கும் என்று இப்போதே உறுதி அளிக்கிறேன்.
மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மூலமாக, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோளாக… உங்களைக் காக்கக்கூடிய நம்முடைய அரசை நீங்கள் காக்க வேண்டும்.