மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.432 கோடியே 92 இலட்சம் மதிப்பீட்டிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 54,461 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்!
அதுமட்டுமல்ல, இலங்கை சிறையில் வாடும் நம்முடைய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்! தமிழர்கள் மீதோ - தமிழ்நாட்டு மீனவர்கள் மீதோ - சிறிதும் அக்கறையில்லாத ஒன்றிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை தாரைவார்த்தது யார் என்று அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவது ஒன்றிய அரசின் அதிகாரத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் பா.ஜ.க.தான் ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதுவரையில், கச்சத்தீவை மீட்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? குறைந்தபட்சம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்வதையாவது அவர்கள் தடுத்து இருக்கிறார்களா? இல்லை!
படகுகளை மீட்க முயற்சி செய்திருக்கிறார்களா? அதுவும் கிடையாது! சமீபத்தில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன பேசியிருக்கிறார்? “கச்சத்தீவு என்பது கடல் பகுதியில், தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியிருக்கிறார்.
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் என்ன பதில் அளித்திருக்கிறார்? தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதுவரை இல்லை! எங்களுடைய தொடர் கோரிக்கை - பிரதமர் இதில் நேரடியாக தலையிட்டு, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்கிறோம்" என தெரிவித்துள்ளார்.