தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறைவாரியாக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,”இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையினுடைய முன்னெடுப்பான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் (Kalaignar Sports kids) உங்களுடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்த்துவிட்டீர்கள் என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி. அவை ஊராட்சியில் உள்ள இளைஞர்களுக்கு, மாணவ, மாணவிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறதா, அதற்கான Register பராமரிக்கப்படுகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோல கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலில் இந்த விளையாட்டு உபரகணங்களை பயன்படுத்தி விளையாட பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்துமாறும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டு அரங்கம் (Mini Stadium) பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நாமக்கல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முத்திரை திட்டங்களுக்கு அனுமதியும், நிதியும் வழங்கி இருக்கின்றார்.
ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், நாமக்கல் புறவழிச்சாலை, பேருந்துநிலையங்கள், போதமலைக்கு சாலை அமைத்தல், 3 மினிஸ்டேடியங்கள் என பல திட்டங்களை குறிப்பிட்டு சொல்லலாம். பணி முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்து குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அலுவலர்கள் உங்களையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்களுடைய கோரிக்கை மனுக்களுக்கு கூடுமானவரை தீர்வு பெற்றுத் தரவேண்டும். தீர்வுகாண முடியாத மனுக்களுக்கு அந்த மனு அளித்தவருக்கு உரிய காரணத்தை எளிமையாக புரியும்படி விளக்கி கூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த அரசின் மீதும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மீதும் நம்பிக்கை வைத்து தான் மக்கள் மனுக்களை அளிக்கிறார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு மனுக்களை அணுகுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இது குறித்து ஆய்வு செய்து சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்களுடன் முதலமைச்சர் முகாம்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரும் 15ந்தேதி துவங்க இருக்கின்றார்கள். அந்த முகாம்களில் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மனுக்கள் அதிக அளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தகுதியுள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்.
சாலைகள், குடிநீர், மின் இணைப்பு போன்ற அடிப்படை தேவைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார் மனுக்களை தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியில் ஆர்வமுள்ள மக்கள் பிரதிநிதிகள் நம்முடைய மாவட்டத்தில் அதிகமாக உள்ளார்கள். அவர்களுடைய முயற்சியினால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல முக்கியமான திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கி இருக்கின்றார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து நம்முடைய அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தருமாறு அரசு அலுவலர்கள் உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.