தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (10.7.2025) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-
இன்றைக்கு நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு 40 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
கல்வி, தொழில், விவசாயம் என எல்லா வகையிலும் சிறந்து விளங்குகின்ற மாவட்டம் என்றால் அது இந்த நாமக்கல் மாவட்டம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நிகழ்ச்சிக்குகூட ஏராளமான மகளிர் வந்திருக்கிறீர்கள், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வந்திருக்கிறீர்கள், விவசாயிகள் வந்திருக்கிறீர்கள், விளையாட்டு வீரர்கள் வருகை தந்து இருக்கிறீர்கள்.
ஆகவே, நம்முடைய அரசு எல்லோருக்குமான அரசு என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே சாட்சி. இங்கே 2 ஆயிரம் பேருக்கு நாம் நலத்திட்ட உதவிகளை கொடுக்கிறோம் என்றால், 2 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுகிறார்கள் என்று அர்த்தம்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மகளிர் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டினுடைய பல திட்டங்களை இன்றைக்கு பிற மாநிலங்கள் பின்பற்றி கொண்டு இருக்கிறது.
அதற்கு சில உதாரணங்களை நான் கூற விரும்புகின்றேன். ஆட்சிக்கு வந்தவுடன் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான, உங்களுக்கான அந்த கையெழுத்துதான், அதுதான் மகளிருக்கான ‘விடியல் பயணம்’ திட்டம்.
இந்த விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இந்த 4 ஆண்டுகளில், இதுவரை மகளிர் தமிழ்நாடு முழுவதும் 730 கோடி பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாமக்கல் மாவட்டத்துல மட்டும் 15 கோடியே 80 இலட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அதேபோல, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம், அரசுப்பள்ளியில படித்து உயர்கல்வி படிப்பதற்கு எந்த காலேஜ் ஆக இருந்தாலும் சரி, தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, படிக்கக்கூடிய அந்த மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையை வழங்குகின்றது நம்முடைய அரசு.
இப்படி ஒவ்வொரு வருடமும் 8 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார்கள். இந்த நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம், வருடா வருடம் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
அதே மாதிரி தாய்மார்கள் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது, குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நாளும் 20 இலட்சம் குழந்தைகள் தமிழ்நாடு முழுவதும் பயன்பெற்று வருகிறார்கள். இந்த நாமக்கல் மாவட்டத்துல மட்டும் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 40 ஆயிரம் குழந்தைகள், பிள்ளைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
இவை அனைத்துற்கும் மேலாக எல்லாருமே திரும்பி பார்க்கிற வைக்கின்ற ஒரு திட்டம், அது தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம், கடந்த 22 மாதங்களாக 1 கோடியே 15 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நாமக்கல் மாவட்டத்துல மட்டும், சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார்கள். இதுமட்டும் இல்ல, இந்த திட்டத்துல இன்னும் புதிதாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விதிகளயும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தளர்த்தி இருக்கிறார்கள். ஆகவே, இப்படி உங்களுக்காக உழைக்கக் கூடிய அரசாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்று இந்த நிகழச்சியில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து 700 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை கொடுக்க இருக்கின்றோம். இதன்மூலம், பட்டா எனும் உங்களுடைய சட்டப்பூர்வ உரிமையை நம்முடைய அரசு நிலைநாட்டி இருக்கின்றது. நம்முடைய முதலமைச்சர் அவர்களை பொறுத்த வரைக்கும் தமிழ்நாடெங்கும் எல்லோருக்கும் எளிதாக பட்டா கிடைக்க வேண்டும் என்பது தான் அவருடைய ஒரே குறிக்கோள், ஒரே எண்ணம்.
அதற்காக அமைச்சரவையைக் கூட்டி, பட்டா வழங்குவதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை, சின்ன, சின்ன இடர்களை எல்லாம் நீக்கிட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அதன் தொடர்ச்சியாகத்தான் உங்களது பட்டா எனும் அந்த கனவு இன்றைக்கு நனவாக்கப்பட்டிருக்கிறது, உண்மையாக்கப்பட்டிருக்கிறது. இந்த நாமக்கல் மாவட்டத்திற்கு என்று நம்முடைய அரசு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார். அவற்றில் ஒன்றிரண்டு திட்டங்களை மட்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் சுற்றுவட்டச்சாலை, முதல் முறையாக போதமலை மலைக்கிராமத்துக்கு ரூபாய் 140 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, 33 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி, நாமக்கல் கூட்டுறவு வங்கியாக பிரிக்கப்பட்டது,
90 கோடி ரூபாய் மதிப்பில் ஆவின் High Tech பால் பண்னை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் என 3 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சருடைய மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. இப்படி இன்னும் பல நடவடிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பல சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
அதனுடைய ஒரு தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு இந்த விழா மேடையில், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள 141 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றோம். அதே போல, சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிநிறைவு முடிவடைந்த பணிகளை திறந்து வைத்திருக்கின்றோம். ஆகவே, நாமக்கல் மாவட்டத்திற்கும், இந்த மாவட்ட மக்களுக்கும், நம்முடைய அரசும், முதலமைச்சர் அவர்களும் என்றைக்கும் துணை நிற்பார்கள்.
ஆகவே, நீங்களும் இந்த அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் துணை நிற்க வேண்டும் என்று கூறிக்கொண்டு, இந்த அரசினுடைய திட்டங்களை நீங்கள் 4 பேருக்கு எடுத்துச்சொல்லி, இந்த அரசினுடைய தூதுவர்களாக (Brand Ambassodors) நீங்கள் அத்தனை பேரும் செயல்பட வேண்டும் என்று கூறிக்கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகின்றேன்.