தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேக்கத்தை தவிர்த்து மழைநீர் சேகரிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையிலும், மேலும் புதிய குளங்கள் உருவாக்குதல், நீர்நிலைகளை புனரமைத்து மேம்படுத்துதல், மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள ஏரிகள் மற்றும் குளங்களை மறுசீரமைத்து, நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப் பாதிப்பினை தவிர்க்கவும், ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்கள்.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பு 2025-26ஆம் ஆண்டில் ரூ.119.12 கோடி மதிப்பீட்டில் 41 குளங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு :
=> திருவொற்றியூர் மண்டலத்தில் 4 குளங்கள் புனரமைக்கும் பணி :
திருவொற்றியூர் மண்டலம், வார்டு-3க்குட்பட்ட எண்ணூர் விரைவுச் சாலை, அன்னை சிவகாமி குளத்தில் ரூ.8.40 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-4க்குட்பட்ட ஏ.டி. காலனி ஏரியில் ரூ.6 கோடி மதிப்பீட்டிலும், கே.எச். சாலை, இரயில்வே குளத்தில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-6க்குட்பட்ட அம்பேத்கர் குளத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் என 4 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளது.
=> மணலி மண்டலத்தில் 28 குளங்கள் புனரமைக்கும் பணி :
மணலி மண்டலம், வார்டு-16க்குட்பட்ட பர்மா நகர் குளத்தில் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டார்குப்பம் மயானபூமியில் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டிலும், சடையான்குப்பம், இருளர் காலனி குளத்தில் ரூ.2.29 கோடி மதிப்பீட்டிலும், குளக்கரை குளத்தில் ரூ.43 இலட்சம் மதிப்பீட்டிலும், எலந்தனூர் குளத்தில் ரூ.56 இலட்சம் மதிப்பீட்டிலும், கே.ஜி.எல். நகர் மயானபூமி குளத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், ஆண்டார்குப்பம் குளத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும், காமராஜபுரம் குளத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-17க்குட்பட்ட வடப்பெரும்பாக்கம் குளத்தில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலும், விநாயகபுரம் மயானபூமி குளத்தில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலும், வடப்பெரும்பாக்கம் சாமுவேல் நகர் மயானபூமி குளத்தில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டிலும், கதகுழி மயானபூமி குளத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டிலும், கொசப்பூர்-ஶ்ரீவேம்புலியம்மன் கோயில் குளத்தில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டிலும், கொசப்பூர், ஶ்ரீசெல்லியம்மன் கோயில் குளத்தில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டிலும், தீயம்பாக்கம் குளத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலும், தீயம்பாக்கம்-காந்திநகர் குளத்தில் ரூ.2.37 கோடி மதிப்பீட்டிலும், சின்னத்தோப்பு குளத்தில் ரூ.2.37 கோடி மதிப்பீட்டிலும், செட்டிமேடு, சக்தியம்மன் கோயில் அருகில் உள்ள குளத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலும், அரியலூர், எச்சன்குளத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-18க்குட்பட்ட அரிகிருஷ்ணாபுரம் குளத்தில் ரூ.83 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு-19க்குட்பட்ட மாசிலாமணி நகர் குளத்தில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சம்பாக்கம் குளத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சம்பாக்கம்-மாத்தூர் குளத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், ஆசிரியர் காலனி குளத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலும், மாத்தூர்-அத்திக்குளத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-21க்குட்பட்ட தாமரைக்குளத்தில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டிலும், திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் எம்.எஃப்.எல். குளத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-22க்குட்பட்ட தேவராஜன் தெரு-இராமலிங்க குளத்தில் ரூ.69 இலட்சம் மதிப்பீட்டில் 28 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளது.
=> மாதவரம் மண்டலத்தில் 4 குளங்கள் புனரமைக்கும் பணி :
மாதவரம் மண்டலம், வார்டு-26க்குட்பட்ட பெருமாள் கோயில் குளத்தில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டிலும், ஜெ.ஜெ. நகர் குளத்தில் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு-28க்குட்பட்ட மாதவரம் செங்குன்றம் சாலை, டால்கோ குளத்தில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-32க்குட்பட்ட பேசின் ஏரியில் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் 4 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளது.
=> தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5 குளங்கள் புனரமைக்கும் பணி :
தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-34க்குட்பட்ட யூனியன் கார்பைட் காலனியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு-38க்குட்பட்ட எண்ணூர் நெடுஞ்சாலை (விரிவு-2)ல் ரூ.5.29 கோடி மதிப்பீட்டிலும், எண்ணூர் நெடுஞ்சாலை (விரிவு-3)ல் ரூ.5.18 கோடி மதிப்பீட்டிலும், எண்ணூர் நெடுஞ்சாலை (விரிவு-4)ல் ரூ.3.51 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-47க்குட்பட்ட பாரதி நகர் பூங்கா-கால்வாய் சாலையில் ரூ.6.24 கோடி மதிப்பீட்டில் 5 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, ரூ.119.12 கோடி மதிப்பீட்டில் 41 குளங்களை புனரமைத்து மேம்படுத்திட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகளுக்கான ஒப்பம் கோரப்பட்டு குளங்கள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. குளங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளின்போது, குளங்களை ஆழப்படுத்தி அகலப்படுத்துதல், கரைகளைப் பலப்படுத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், நடப்பாண்டில் ரூ.25.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5 குளங்கள் புனரமைப்புப் பணிகள் நடப்பாண்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், திருவொற்றியூர் மண்டலம், வார்டு-7க்குட்பட்ட கார்கில் நகர் குளத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டிலும், மாதவரம் மண்டலம், வார்டு-27க்குட்பட்ட மாதவரம் ஏரியில் ரூ.7.22 கோடி மதிப்பீட்டிலும், மாதவரம் பால் பண்ணை காலனி, ஆவின் குளத்தில் ரூ.59 இலட்சம் மதிப்பீட்டிலும், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38க்குட்பட்ட எண்ணூர் நெடுஞ்சாலை (விரிவு-1)ல் உள்ள குளத்தில் ரூ.2.55 கோடி மதிப்பீட்டிலும், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.25.25 கோடி மதிப்பீட்டில் 5 குளங்களில் புனரமைப்புப் பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
=> மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 குளங்களில் கொள்ளளவுத் திறன் அதிகரிக்கும் பணி :
கிண்டி, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் 14,070 கன மீட்டர் (அ) 0.50 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கம் கொண்ட ஏற்கனவே உள்ள 2 குளங்களில் அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 19,560 கனமீட்டர் (அ) 0.69 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் புனரமைக்கப்பட்டது.
மேலும், இந்த வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக 4 குளங்கள் 1,10,800 கன மீட்டர் (அ) 3.91 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த 4 குளங்களில் கூடுதலாக சேர்த்து 45,760 ச.மீ. பரப்பளவில், 2,28,800 சதுர கனமீட்டர் (அ) 8.07 மில்லியன் கன அடி கொள்ளளவுத் திறனுடன் மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி மற்றும் ஐந்து பர்லாங் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெள்ளப் பாதிப்புகள் பெரிதும் குறையும்.
மேலும், நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளுக்காக சமூகப் பொறுப்புணர்வு நிதி (Corporate Social Responsibility – CSR) பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முயற்சியில் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Environment Foundation of India – EFI) நிறுவனம் 22 நீர்நிலைகள் புனரமைப்புப் பணிக்கு அனுமதி வேண்டி கடிதம் வழங்கியுள்ளது. மேலும், பல நீர்நிலைகள் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் (CSR Fund) புனரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.