தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 4 புதிய அரசு கல்லூரிகள் திறப்பு - கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் திமுக அரசு!

வேலூர் மாவட்டம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் 4 புதிய அரசு கல்லூரிகள் திறப்பு - கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் திமுக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 36 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாக பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025- 26 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 4 புதிய அரசு கல்லூரிகள் திறப்பு - கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் திமுக அரசு!

அந்த அறிவிப்பின்படி, 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 26.5.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025 - 2026), உயர்கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அவர்களால் 30.05.2025 அன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள் முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், 2 கோடியே 38 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேந்தர் குடியிருப்பு, 8 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள் மற்றும் 6 கோடியே 56 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 36 கோடியே 17 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories