
உலகம் முழுவதும் தங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், இந்தியாவில் தங்கத்துக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் நல்ல நாள், திருமணம் போன்ற விசேஷங்கள், அக்ஷய திருதியை போன்ற நாட்களில் கூட தங்கம் வாங்கி மகிழ்வர். இப்படியாக தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனினும் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்கி வைப்பர். காரணம் எதாவது ஆத்திர அதனை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று. அதன்படி தற்போதுள்ள நிலவரப்படி பலரும் அவசர பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வந்தனர். இதில் தனியார் கடைகளில் வட்டி அதிகம் என்பதால், பலரும் வங்கிகளில் வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு RBI புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஒருவர் தனது நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம். இது கடந்த மே மாதம் முதல் அமலுக்கு வந்த நிலையில், தொடர்ந்து நகைகளை அடமானம் வைப்பதற்காகவே 9 அறிவிப்புகளை அறிவித்தது ரிசர்வ் வங்கி.
அதன்படி அடமானம் வைக்கப்படும் நகைக்கு 75% மட்டுமே பணம் கொடுக்க முடியும். இப்படியாக அடுத்தடுத்து என்று ஒன்றிய அரசு சாமானிய மக்களின் தலையில் இடியை இயக்கியுள்ள நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது அந்த கடிதத்திற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவு வருமாறு :
*சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில்*
புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28, 2025 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார்.
*கவர்னர் பதில்*
தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் அளித்துள்ளார்.
*முயற்சிகள் தொடரும்*
ஏற்கனவே நான் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப் பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.
நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன்.








