முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஜுன் திங்கள் 3 ஆம் நாள் இன்றைய திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் சிறு பருவத்திலேயே சீர்திருத்தக் கருத்துகள் அவர் நெஞ்சில் வளரத் தொடங்கின. அவற்றின்அடிப்படையில் பள்ளிப் பருவத்திலேயே முரசொலி கையேழுத்து ஏடாகவும், பின்னர் மாத வார ஏடாகவும், நாளேடாகவும் வளர்ந்து இன்றும் பத்திரிகை உலகில் ஓர் சிறந்த ஆயுதமாகப் பயன்படுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைச் சந்தித்தபின், அவர்களுடைய கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, அவற்றை தம்வாழ் நாள் முழுவதும் பரப்பி அவ்வழியில் இறுதிவரை வாழ்ந்தவர்.
1957 ஆம் ஆண்டு குளித்தலைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்பு, 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, 1971, 1989, 1996, 2006ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றி பல எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கிச் சிறப்பு செய்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்றிட எண்ணற்ற சிறப்பான சமூக நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் குடிசைப் பகுதி மாற்று வாரியம், பேருந்துகள் நாட்டுடைமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்துரிமை, உழவர் சந்தை, வருமுன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம், மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தினார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களால் ‘கலைஞர் அவர்களை அறிவில் சிறந்தவர் என்றும், நிருவாகத்தில் சிறந்தவர்’ என்றும் பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்வதில் சிறந்தவர்’ என்றும், பாராட்டப் பெற்றவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தண்டவாளத்தில் தலைவைத்துப் படு’ என்று சொன்னாலும், ‘அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்’ என்று சொன்னாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவர் என் தம்பி கருணாநிதி’. ‘என் தம்பி பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இடம்தான் நான் யாத்திரை செல்லும் தலம் என்று கூறினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆட்சிப்பணி என்பது, இடையில் வரும் போகும் என்றும் என் எழுத்துப் பணி, எனது செங்கோல்; என்றைக்கும் என்னிடமிருந்து எவராலும் பறிக்க முடியாது; என்றைக்கும் நிலையானது என்றும் குறிப்பிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கலைத்துறையில் ஆற்றியுள்ள பணிகள் அளவில்லாதவை. 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். பல்வேறு நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள், உரைநூல்கள், கட்டுரைகள் எழுதிச் சாதனைகள் படைத்தார். முக்கியமாக, திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, இலக்கியப் படைப்புகள், குறள் ஓவியம், சிலப்பதிகாரம், நாடகக் காப்பியம், பூம்புகார், தாய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தனது வாழ்க்கை வரலாற்றைத் தமிழக மக்கள் அறியும் வகையில் “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பில் முரசொலி மற்றும் குங்குமம் இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர், அவை “நெஞ்சுக்கு நீதி” ஆறு பாகங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமது பொது வாழ்வில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வழியில் அயராது உழைத்து ஆற்றியுள்ள தொண்டுகள் ஏராளம். தமிழ்ச் சமுதாயத்தின் உரிமைகளை நிலைநாட்ட அரும்பாடுபட்டார். தீண்டாமையின் விளைவாகச் சமுதாயத்தில் நீடிக்கும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்படும் நாட்டு மக்கள் நல்வாழ்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், பெண்ணுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அயராது பாடுபட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கும் வழிகாட்டியாக இருந்தவர் கலைஞர் அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்கள் அறிந்திடும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, 26.2.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தின் அருகில் கீழ்த்தளத்தில் டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலக அருங்காட்சியகத்தினை நாள்தோறும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழும்போது வரலாறாகவும், மறைந்தும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நிலைத்து வாழ்கின்ற அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த ஜுன் 3-ஆம் நாள் “செம்மொழி நாள்” என தமிழ்நாடு அரசினால் அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்" என தெரிவித்துள்ளார்.