முரசொலி தலையங்கம் (03-06-2025)
மதுரை மண்ணில் மகத்தான முழக்கம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாம் பொதுக்குழு மதுரை மண்ணில் நடைபெற்றுள்ளது. கழகத்தின் ரத்தநாளங்களாக இருக்கக் கூடிய பொதுக்குழு உறுப்பினர்களுக்காக கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை மகத்தான உரையாக அமைந்திருந்தது.
பேரறிஞர் அண்ணா பேசுகிறாரா? தமிழினத் தலைவர் கலைஞர் உரையாற்றுகிறாரா? இனமானப் பேராசிரியரின் குரலா அது? - என்றெல்லாம் சொல்லத்தக்க வகையில் அமைந்திருந்தது திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களது உரை!
ஒரு தலைவர் தொண்டர்களின் நிலையில் இருந்து பேசினார். ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர், மக்களின் நிலையில் இருந்து பேசினார். ஒரு தமிழர், தமிழ்நாட்டுக்காகப் பேசினார். இந்தியாவுக்காகப்பேசினார். தமிழ்நாட்டின் வளத்துக்கும் நலத்துக்கும் பேசினார். இந்தியாவின் எதிர்கால நன்மைக்காகவும் பேசினார். ஒரே உரையில் இத்தனை பரிமாணங்களைப் பார்க்க முடிந்தது. எந்த அரசியல் கட்சித் தலைவரும், எந்த மாநிலத்து முதலமைச்சரும் இத்தகைய பொது நோக்கத்தோடு பேசி இருக்க முடியாது.
அதனால்தான், 'திராவிட முன்னேற்றக் கழகம் சராசரி அரசியல் கட்சியல்ல' என்று சொன்னார். எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும், போகும். வந்திருக்கிறது, போயிருக்கிறது. அவர்கள் தோன்றியதற்கும் காரணம் இல்லை, அழிந்து போனதற்கும் காரணம் சொல்லத் தேவையில்லை. ஆனால் ஒரு அரசியல் இயக்கம் கொள்கைக்காகத் தோன்றியது. கொண்ட கொள்கையை வெற்றி பெற வைப்பதற்காகத் தோன்றியது.
‘நாங்கள் அசாதாரணமானவர்கள். இந்த நாட்டில் நிலவும் அசாதாரணச் சூழல் தான் எங்களை உருவாக்கியது. இந்தக் காலம் மாறும் வரை எங்கள் தேவைகள் இருக்கும். எங்களுக்கான தேவைகள் இருக்கும் வரை நாங்களும் இருப்போம்' என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
சமுதாய சீர்திருத்தம் பேசியவர்கள், தேர்தலுக்கு நின்று ஆட்சியைப் பிடித்ததும், தன் கையில் கிடைத்த அரசியல் அதிகாரத்தை நிர்வாக நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல், சீர்திருத்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பாகும். எந்தக் கொள்கைக்காக போராடி, வாதாடி, சிறைக்குப் போனார்களோ அந்தக் கொள்கைக்கான சட்டத்தை இயற்றியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை ஆகும்.
தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாதாடியது தி.மு.க. அண்ணா முதலமைச்சராக வந்து சட்டம் போட்டார். சுயமரியாதைக் கொள்கையை நாடு முழுவதும் பேசினார் அண்ணா. சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று சட்டம் போட்டவரும் அவரே. இந்தியை எதிர்த்து இருபது ஆண்டுகள் போராடியது தி.மு.க. தமிழும் ஆங்கிலமும் தான், இந்திக்கு இங்கு இடமில்லை என்று சட்டம் போட்டார் அண்ணா. சமூகநீதிக்காக போராடிய இயக்கம் தி.மு.க. அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது தி.மு.க. அரசு. அனைத்துச் சாதியினரையும் கோயில் அர்ச்சகர் ஆக்கியது திமுக. வீட்டுமனை குடியிருப்போருக்குச் சொந்தம் என்றதும், 2 ஏக்கர் நிலம் தந்ததும் கலைஞர் அரசு. இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்கியதும் கலைஞர் அரசே. பெண்ணுரிமை பேசிய இயக்கத்தின் ஆட்சியில்தான் மகளிருக்குச் சொத்துரிமையும், மகளிருக்கு உரிமைத் தொகையும் வழங்கப்பட்டது. கல்வி எனும் நீரோடையை ஒவ்வொரு இல்லமும் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“நாம் வழக்கமான அரசியல் கட்சி அல்ல, அரசியல் கட்சிகள் வரும், போகும். நாம் ஒரு கொள்கைக்காக இயக்கத்தை உருவாக்கியவர்கள். அந்தக் கொள்கைக்காக வாழ்கிறவர்கள். கொள்கையைப் பரப்ப, கட்சியும், கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று நினைப்பவர்கள். கொள்கைக் கூட்டம் இது என்பதால் தான் எந்தக் கோமாளிக் கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியாது”என்று மதுரையில் முழங்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
“இது வழக்கமான பொதுக்குழு அல்ல, வாகை சூடுவதற்கு வியூகம் வகுக்கும் பொதுக்குழு ஆகும். அடுத்த ஆண்டு இதே நாளை நினைத்துப் பாருங்கள். நாம் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருப்போம். ஏழாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது என்ற வெற்றிச் செய்தி நம்மை வந்து அடைந்திருக்கும். 298 தொகுதி களுக்கு மேல் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி என்ற வெற்றிச் செய்தியை நாம் பெற்றிருப்போம். இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது என்ற செய்தியை நாம் பெற்றிருப்போம். அதற்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழு இது”என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
*இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நலம் பயக்கும் திட்டங்களை உருவாக்கித் தந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். அந்தத் திட்டங்களின் பயனை மீண்டும் நினைவூட்டுவதே மாபெரும் பரப்புரை ஆகும்.
*இது வரை அடையாத உயரத்தை தமிழ்நாடு அடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் மட்டும் தான் இந்த உயரம் தக்க வைக்கப்படும்.
*தமிழ்நாட்டைக் காக்க வேண்டுமானால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும். கொத்தடிமை எடப்பாடி பழனிசாமிகூட்டத்தை முன் வைத்து, பாசிச பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றப் பார்க்கிறது. அதனை அனுமதிக்கக் கூடாது.
*பாசிச பா.ஜ.க. கூட்டத்துக்கு தமிழ்நாடு எந்தக் காலத்திலும் அடிபணியாது- என்பதை அழுத்தம் திருத்தமாக எச்சரிக்கை முழக்கமாகச் சொன்னார் திராவிட நாயகன்.
200 வெல்வோம் என்பதை, 'எதிரிகளே இல்லை என்ற ஆணவமாகச்சொல்லவில்லை, என்னரும் உடன்பிறப்புகள் மீதுள்ள நம்பிக்கையால் சொல்கிறேன்' என்றார் தலைவர்.
தொண்டர்களின் பலத்தால் காலூன்றி -பொதுமக்களின் நம்பிக்கையால் தலைக்கு மேல் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். அவரது மதுரை பொதுக்குழு உரையானது தொண்டர்களின் குரலாக, பொதுமக்களின் குரலாக அமைந்தது. தமிழ்நாடு சிறக்க, இந்தியாவைக் காக்க 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்!