முரசொலி தலையங்கம்

'எளிமை ஆளுமை' திட்டம் - உண்மையான மக்களாட்சி என்பது இப்படித்தான் நடக்கும் : முரசொலி!

முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை தினமும் உயர்த்திக் கொண்டே செல்கிறது.

'எளிமை ஆளுமை' திட்டம் - 
உண்மையான மக்களாட்சி என்பது இப்படித்தான் நடக்கும் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (02-06-2025)

எளிமை ஆளுமை!

எளிமையே அழகு என்பார்கள். எளிமையே ஆளுமை என்பதைத் தொடர்ந்து மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மக்களுக்காக உழைத்து - மக்களுடனே வாழ்ந்து - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு - மக்களாட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் கோரிக்கையையும் கேட்டுக் கேட்டு நிறைவேற்றித் தரும் மக்கள் முதலமைச்சராகச் செயல்படும் முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை தினமும் உயர்த்திக் கொண்டே செல்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை தி.மு.க. தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திரட்டினார்கள். 'திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து சாத்தியமான அனைத்து திட்டத்தையும் உருவாக்கித் தருவேன்' என்று வாக்குறுதி தந்தார்கள்.

"இந்த இடத்துக்கு வந்த உடனே அனைவரும் தங்கள் குறைகளை முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்திருந்தேன். அந்த முறைப்படி உங்கள் குறைகளை எழுதிக் கொடுத்திடீங்களா? அதுக்கு ..... இந்த மாதிரி ஒரு ரசீது கொடுத்தாங்களா? அந்த ரசீதை வாங்கிட்டீங்களா? காட்டுங்க! அப்படி யாராவது ரசீது வாங்காம இருந்தீங்கன்னா... இந்தக் கூட்டம் முடிந்ததும் போய் ரசீதை மறக்காம வாங்கிக் கோங்க! அது சாதாரண ரசீது மட்டுமல்ல. அதை வைத்து நீங்கள் என்னைக் கேள்வி கேட்கலாம். அதற்காக உரிமை சீட்டு அது” என்று அக்கூட்டத்தில் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

"100 நாளில் உங்கள் குறைகளைத் தீர்ப்பேன். இல்லாவிட்டால் என்னைக் கேள்வி கேட்கலாம்” என்ற உரிமையை மக்களிடம் கொடுத்திருக்கிறார் தலைவர்.

"கண்களில் கனவுகளோடும் கையில் மனுக்களோடும் இதயத்தில் ஏக்கத்துடனும் - இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் உங்களது நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நான் ஆட்சி அமைத்தால் 100 நாளில் உங்கள் பிரச்சினையைத் தீர்ப்பேன்” என்று அப்போது வாக்குறுதி அளித்தார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தனித்துறையை உருவாக்கி அவை அனைத்தையும் வேண்டுகோள்களை நிறைவேற்றியும் வைத்த சாதனை முதலமைச்சர் தான் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

அடுத்தடுத்து வரும் மனுக்களை பரிசீலித்து தீர்வு காண, 'முதல்வரின் முகவரி' என்ற தனித்துறையை உருவாக்கினார் முதலமைச்சர் அவர்கள். முதல்வரின் முகவரித்துறை என்ற துறையின் கீழ் கடந்த மூன்றாண்டு காலத்தில் 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 384 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு காணப் பட்டுள்ளது. மக்களாட்சியின் மாபெரும் சாதனை இது.

இதைத் தொடர்ந்து மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பொதுமக்கள் அதிகமாகத் தொடர்பு கொள்ளும் 13 அரசுத் துறைகள் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் முகாம்கள் மூலமாகப் பெற்று அந்த கோரிக்கைகள் 30 நாட்களுக்குள் நிறைவேற்றித் தரப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். முதலில் நகராட்சிப் பகுதியில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. அடுத்து ஊராட்சிப் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

கோரிக்கை மனுக்களை அரசாங்கமே மக்களது இருப்பிடத்துக்குச் சென்று வாங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் நினைத்தார்கள். அதற்காக உருவாக்கப்பட்டது தான், ‘மக்களுடன் முதல்வர்' என்ற திட்டமாகும். இதோ இப்போது 'எளிமை ஆளுமை' என்ற திட்டத்தை கடந்த 29 ஆம் தேதியன்று முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

'எளிமை ஆளுமை' திட்டம் - 
உண்மையான மக்களாட்சி என்பது இப்படித்தான் நடக்கும் : முரசொலி!

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகிய பத்து சேவைகளின் நடைமுறைகளை எளிமையாக்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். அனைத்தும் இணைய வழியில் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு நிர்வாக நடைமுறை எளிமையாக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதில் பெறலாம். நேரில் வரத் தேவையில்லை. காத்திருக்கத் தேவையில்லை, அலையத் தேவை இல்லை என்பது இத்திட்டத்தின் சிறப்பாகும்.

முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் மனுக்களைத் தருகிறார்கள் என்றால் அதில் இருந்து ஒரு நம்பிக்கை தெரிகிறது. ‘முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேறும்' என்பதுதான் அந்த நம்பிக்கை. அத்தகைய மாபெரும் நம்பிக்கையை மக்களிடம் பெற்றுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

உண்மையான மக்களாட்சி என்பது இப்படித்தான் நடக்கும். அதனைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

banner

Related Stories

Related Stories