தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமுதா,” மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21 ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதியில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.
தென்மேற்கு பருவமழை தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு, குமரிகடல், தெற்கு வங்க கடல் பகுதிகளில் பரவியுள்ளது. அடுத்த மூன்று தினங்களில் மாலத்தீவு, குமரி கடலின் ஏனைய பகுதிகள், தெற்கு அரபிக்கடல் ,வங்க கடல் பகுதிகளிலும் மேலும் சில பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி நாமக்கல் கடலூர் தஞ்சாவூர் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பதிவாகியுள்ளது.
மேலும் இன்று கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 12 மாவட்டங்களுக்கும் கனமழை வாய்ப்பு
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இந்த இரண்டு நாட்கள் வெப்பம் படிப்படியாக குறையும் ,அதற்குப் பிறகு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழ்நாட்டு கடலோர பகுதிகளில் 19 ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதிகள் மன்னர் வளைகுடா அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிக்கு செல்லக்கூடாது.
கோடை மழை மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை 192.7 மீமீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு நிலை மழை 101.4 மீமீ அளவானது. இது சராசரியை விட 90 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 27ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு ஒரு சில நாள் கழித்து தமிழக பகுதியில் அது பரவக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.