கடந்த 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். மேலும் இந்த வன்கொடுமை தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த அதிமுக அரசு, பின்னர் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தில் வழக்குப்பதிவு செய்தது.
அப்போது இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 9 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களை காப்பாற்றும் முனைப்பிலேயே அப்போதைய அதிமுக அரசு செயல்பட்டது. எனினும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குள் ரூ.85 லட்சம் நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் யாரை பாதுகாக்க வேண்டும் என நினைத்தார்களோ அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அதிமுகவினர்தான் தலைகுணிந்து நிற்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டி வருமாறு :
பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், பாலியல் கொடுமைகள் அனைத்தும் நம் மனதில் நீங்காத காயமாக உள்ளன. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள இன்றைய தீர்ப்பு, அந்த காயத்திற்கு மருந்தாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியாகவும், குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனையாகவும் உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் வெளியிடாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பாதிக்கப்படக்கூடிய அனைத்து பெண்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் இந்தத் தீர்ப்பு உள்ளது.
குறிப்பாக, தாங்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலோ, தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வெளியே பேசினால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் நடந்த குற்றத்தை விசாரிக்க முடியாத நிலைதான் அன்றைய அதிமுக ஆட்சியில் இருந்தது. குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் இருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் அதிமுகவினராக இருப்பதால் பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
திமுகவும் மற்ற எதிர்கட்சிகளும் ஊடகங்களும் நீதிக்காகப் போராடின. இதற்கடுத்தே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முன்வந்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அன்றைக்கு திமுக மகளிரணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது போராட்டம் நடக்கும் இடத்திற்கு நான் செல்லக்கூட அனுமதிக்கவில்லை. பின்பு அனுமதிக்காக ஒரு தர்ணா போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.
அந்த அளவுக்கு குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த நமது முதலமைச்சரும் பிற எதிர்கட்சிகளும் என அனைத்து தரப்பிலும் வலியுறுத்திய காரணத்தினால்தான், பின்னர் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு இதில் நியாயம் கிடைக்கும் என முதலமைச்சர் அவர்கள் அப்போது உறுதி அளித்து இருந்தார்கள். அந்த வாக்குறுதி, இன்று நிறைவேற்றிய நாளாக பார்க்கிறேன்.
திமுக ஆட்சியின் மீது இன்று மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. குற்றம் நடக்கும்பட்சத்தில் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வரது ஆணை. தமிழ்நாட்டில் குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதில் திராவிட மாடல் ஆட்சி உறுதியாக இருக்கிறது. ஒருவேளை சில குற்றங்கள் நடைபெற்று விட்டால், பாதிக்கக் கூடியவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர்ர் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
யாரை பாதுகாக்க வேண்டும் என நினைத்தார்களோ அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அதிமுகவினர்தான் தலைகுணிந்து நிற்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக மத்தியில் ஆளும் நிலையில், இன்றைக்குத் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக விளங்குகிறது என்பதை தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.