“பாவேந்தர்” பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 அன்று புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி அம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘கனகசுப்புரத்தினம்’. இவர் தமது இளம் வயதிலிருந்து தமிழ்மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். 1946 ஆம் ஆண்டு “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக “‘தங்கக்கிளி பரிசு” வென்றார்.
மகாகவி பாரதியார் அவர்கள் புதுவையில் தங்கியிருந்தபோது, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர் போலவே இனிய கவிதைகளை எழுதிக் குவித்தார். பாரதியார் அவர்களைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, பாரதிதாசன் எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன் ஒரு தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், அரசியல்வாதி, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ்மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 86க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார். ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக 1970ஆம் ஆண்டில் அவருக்கு, ‘சாகித்திய அகாடமி விருது’, வழங்கப்பட்டது.
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனும் தேன்சுவை சொட்டும் பாடல்கள் பல படைத்துள்ளார். தம் படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றி, தமிழ் இனத்திற்கு எழுச்சியூட்டிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 74 ஆண்டுகள் வாழ்ந்து 21.4.1964 அன்று இயற்கை எய்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் தொடங்கி 1942-ஆம் ஆண்டில் முதல் ஆண்டு விழாவைக் கொண்டாடியபோது அவ்விழாவிற்காக, பாவேந்தர் பாரதிதாசன் “கிளம்பிற்றுக்காண் தமிழச் சிங்கக் கூட்டம் - கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை” எனும் புகழ்வாய்ந்த வரிகள் அமைந்த வாழ்த்துக் கவிதையை எழுதி அனுப்பினார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தாம் கதைவசனம் எழுதிய, “பராசக்தி” திரைப்படத்தின் தொடக்கத்தில் “வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு” எனும் புரட்சிக் கவிஞரின் பாடலை அமைத்து பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைப் பெருமைப்படுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தம் ஆட்சிக் காலத்தில் 1990 ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடச் செய்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பாவேந்தரின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கிவைத்து, அவ்விழாவில் அவரது முழுவுருவச் சிலையைத் திறந்துவைத்து மகிழ்ந்தார். அத்துடன், புரட்சிக்கவிஞர் நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கி அவரது மரபுரிமையருக்கு ரூபாய் 8 இலட்சம் பரிவுத்தொகை வழங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால், 2001 ஆம் ஆண்டு பாரதிதாசன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசனை “தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்” என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களால் ‘புரட்சிக் கவிஞர்’ என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் சென்னையில் கொண்டாடப்பட்ட இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது கடற்கரை காமராசர் சாலையில் 2.1.1968 அன்று பாவேந்தர் அவர்களின் சிலை திறந்துவைக்கப்பட்டது.
=> முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி தமிழ் வார விழா :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் இனத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 29-ஆம் நாள் முதல் மே 5-ஆம் நாள் வரை தமிழ்நாடு முழுவதும் “தமிழ் வாரம்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் “பாவேந்தர்” பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135-வது பிறந்த நாளாகிய 29.4.2025 அன்று காலை 9.15 மணியளவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்த விழாவில், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.