முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் கும்பகோணம் பகுதியில் அமைக்கப்பட இருக்கும் கலைஞர் பெயரிலான பல்கலைக்கழகத்தின்கீழ், 4 மாவட்டங்களைச் சேர்ந்த 17 கல்லூரிகள் செயல்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏபரல் 24-ஆம் நாள், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும், வகையில் அதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28) தாக்கல் செய்தார்.
அந்த சட்ட முன்வடிவில் தமிழ்நாட்டில் அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருவாரூர் என 8 மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரே பல்கலைக்கழகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கும் புதிய பல்கலைக்கழகத்தை தொடங்குவது அவசியமானது எனவும், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் இருப்பார் எனவும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார் எனவும் சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் வேந்தரான முதலமைச்சருக்கே வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி, தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கல்லூரி, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, குடவாசல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என மொத்தமாக 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.