ஜம்மு - காஷ்மீரில் அமைந்திருக்கும் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த ஏப்.22-ம் தேதி இராணுவ உடையில் இருந்த 4 பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கண்டனங்களும் வலுத்தது.
தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், வாஹா எல்லையை மூடவும் இந்திய அரசு உத்தரவிட்டது.
மேலும் பாகிஸ்தான் நாட்டினர் யாருக்கும் இனி இந்திய விசா கிடையாது என்றும், பாகிஸ்தானியர்களுக்கு ஏற்கனவே விநியோகித்துள்ள விசாக்கள் வரும் 27-ம் தேதி வரையும், மருத்துவ விசா வரும் 29-ம் தேதி வரையும் மட்டுமே செல்லும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்தது. தொடர்ந்து சிந்து நதிநீரை இந்திய அரசு நிறுத்தி வைத்து பாகிஸ்தான் தலையில் பெரிய இடியை இறக்கியது.
இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் மீது மறைமுக தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் மூளும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில்தான், இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று, பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
அதோடு பஹல்காம் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் Youtube சேனல்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. மேலும் இந்தியா மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இப்படி தவறான தகவல்களை பிறப்பாய் 16 முக்கிய Youtube சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
=> அதாவது செய்தி சேனல்களான - Dawn, Samaa TV, ARY News, Bol News, Raftar, Geo News, GNN & Suno ஆகியவையும்
=> பாக். ஊடகவியலாளர் சேனல்களான - Irshad Bhatti, Asma Shirazi, Umar Cheema & Muneeb Farooq
=> இதர சேனல்களான - The Pakistan Reference, Samaa Sports, Uzair Cricket & Razi Naama
- ஆகிய 16 பாகிஸ்தான் Youtube சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.