உலகம்

ஆவேசத்தில் சிந்து நீரை நிறுத்திய இந்தியா.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்.. சிம்லா ஒப்பந்தம் ரத்து! - பின்னணி?

ஆவேசத்தில் சிந்து நீரை நிறுத்திய இந்தியா.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்.. சிம்லா ஒப்பந்தம் ரத்து! - பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜம்மு - காஷ்மீரில் அமைந்திருக்கும் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த ஏப்.22-ம் தேதி இராணுவ உடையில் இருந்த 4 பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கண்டனங்களும் வலுத்தது.

தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்.23) இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், வாஹா எல்லையை மூடவும் இந்திய அரசு உத்தரவிட்டது.

பஹல்காம் கோர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
பஹல்காம் கோர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்

இதன் தொடர்ச்சியாக இன்று (ஏப்.24) பாகிஸ்தான் நாட்டினர் யாருக்கும் இனி இந்திய விசா கிடையாது என்றும், பாகிஸ்தானியர்களுக்கு ஏற்கனவே விநியோகித்துள்ள விசாக்கள் வரும் 27-ம் தேதி வரையும், மருத்துவ விசா வரும் 29-ம் தேதி வரையும் மட்டுமே செல்லும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து என பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், அடுத்ததாக சிந்து நதி நீரை இந்திய அரசு நிறுத்தி வைத்து பாகிஸ்தான் தலையில் பெரிய இடியை இறக்கியுள்ளது. இதனால் 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

4 பயங்கரவாதிகள்
4 பயங்கரவாதிகள்

இந்த நதி நீர் நிறுத்தி வைப்பு என்பது பாகிஸ்தான் மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கும் செயலாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் சிந்து நீரை இந்தியா நிறுத்தியது, போருக்கு சமமான நடவடிக்கை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் நாட்டு வான் எல்லையில் நுழைய இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ள பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.

ஆவேசத்தில் சிந்து நீரை நிறுத்திய இந்தியா.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்.. சிம்லா ஒப்பந்தம் ரத்து! - பின்னணி?

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீரை பங்கிடுவது உலக வங்கியின் முன்னிலையில் செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும். இப்படி இருக்கும்போது இதை ஒருதலைப்பட்சமாக நிறுத்த எந்த உரிமையும் கிடையாது. 240 மில்லியன் மக்களுக்கு சிந்து நதி நீரே இதுவே வாழ்வாதாரம். எனவே இந்த நீர் கிடைக்கும் உரிமையை எந்த விலை கொடுத்தாவது காப்பாற்றுவோம். எங்களுக்கு உரிய நீரை தடுத்து நிறுத்துவதும், அதை மடை மாற்றம் செய்வதும் போருக்கும் இணையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்.

சர்வதேச ஒப்பந்தங்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் உலக சட்டங்களை இந்தியா மீறுகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்தியாவின் இப்படியான மோசமான எண்ணங்கள் மற்றும் சட்ட மீறல்களும் தொடரும் வரை இரு தரப்பில் போட்டப்பட்ட எந்த ஒப்பந்தங்களையும் பாகிஸ்தான் பின்பற்றாது" என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதோடு தங்கள் நாட்டு வான் எல்லையில் நுழைய இந்திய ஏர்லைன்ஸுக்கு தடை விதித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆவேசத்தில் சிந்து நீரை நிறுத்திய இந்தியா.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்.. சிம்லா ஒப்பந்தம் ரத்து! - பின்னணி?
சிம்லா ஒப்பந்தம் - அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ

=> சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?

கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற போர், 1971-ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமூக உறவு ஏற்பட வேண்டும் என்று 1972-ம் ஆண்டு ஒரு அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் சிம்லாவில் வைத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 1972-ம் ஆண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தமே 'சிம்லா ஒப்பந்தம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் என்பது சமாதான ஒப்பந்தம் மட்டுமல்ல; இது இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளுக்கான கட்டமைப்பை வழங்குகிறது.

* போர்க் கைதிகளைத் திருப்பி அனுப்புதல், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் பரிமாற்றம் மற்றும் காஷ்மீர் சர்ச்சை போன்ற போருக்குப் பிறகு எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

* இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அனைத்து பிரச்சினைகளையும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் மிக முக்கியமான விதியாகும்.

* மேலும் போர் நிறுத்தத்துக்கு பிறகு நிறுவப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டை இரு நாடுகளும் மதிக்க வேண்டும் என்றும், இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) என்றும் அங்கீகரிக்கப்பட்டது. அதோடு இதனை இரு தரப்பினரும் ஒருதலைப்பட்சமாக மாற்ற முயற்சிக்க மாட்டார்கள் என்று ஒப்புக்கொண்டனர்.

* அதுமட்டுமின்றி போரில் கைப்பற்றப்பட்ட மேற்கு பாகிஸ்தானின் பகுதிகளை திருப்பித் தரவும், 90,000 பாகிஸ்தான் போர்க் கைதிகளை விடுவிக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டது. இதற்குப் பதிலாக, பங்களாதேஷை அங்கீகரித்து இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதாக பாகிஸ்தான் உறுதியளித்தது.

* இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கவும், சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அமைதியான சகவாழ்வின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவும் உறுதியளித்தன. அதோடு வர்த்தகம், தொடர்பாடல் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

- இதில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆவேசத்தில் சிந்து நீரை நிறுத்திய இந்தியா.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்.. சிம்லா ஒப்பந்தம் ரத்து! - பின்னணி?

=> சிந்து நதி நீரை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் விளைவுகள் :

* பிரிட்டிஷ் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பல விசயங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டது. அதில் முக்கியமானது நதிநீர்.

* அதாவது சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகளை பிரிப்பதில் சிக்கல் இருந்தது. அந்த சமயத்தில் உலக வங்கி இந்த பிரச்சினையில் தலையிட்டு இந்தியாவுக்கு 3, பாகிஸ்தானுக்கு 3 என்று பிரித்தது.

* அதாவது, சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்கு பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ரவி ஆகிய மூன்றும் கிழக்கு பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன.

* அதன்படி, கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை (பியாஸ், சத்லஜ், ரவி) முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு பகுதி ஆறுகளின் நீரை (சிந்து, ஜீலம், செனாப்) முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேலும் கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காக பாகிஸ்தானுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

* பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிந்து நதி உள்ளது.

* சிந்து நதி நீர்வளத்தில் 20 சதவீதம் இந்தியா கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 80 சதவீதம் பெறுகிறது.

* விவசாயம், எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகாலத் தாக்கங்களை இது ஏற்படுத்தக்கூடும்

* பாகிஸ்தானில் தற்போது விவசாய பணிகளுக்கான விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

banner

Related Stories

Related Stories