ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் கோடை விடுமுறையிலும் மக்கள் சுற்றுலா உள்பட பல பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதன்படி இந்த முறையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஜாக்பாட்டாக, இந்த கோடை விடுமுறையில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் 75 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து மேற்கண்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் 75 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
=> அதன் படி முதல் பரிசு வெல்லும் 25 நபர்கள் 1.07.2025 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
=> இரண்டாம் பரிசு வெல்லும் 25 நபர்கள் 1.07.2025 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவசமாக பயணம் செய்யலாம்.
=> மூன்றாம் பரிசு வெல்லும் 25 நபர்கள் 1.07.2025 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 05 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.