தமிழ்நாடு

UPSC தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

UPSC தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.4.2025) சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  “நான் முதல்வன்” திட்டம் மற்றும்  தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். 

=> அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம்

சென்னை, பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சி வகுப்புகள், உணவு மற்றும் தங்குமிடத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் கடந்த 58 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

UPSC தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதன்மைத் தேர்விற்கு 216 ஆர்வலர்கள் (Aspirants) முழுநேரமாக இம்மையத்தில் பயிற்சி பெற்றார்கள். படிப்பு ஊக்கத் தொகையாக மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ.3000/- வீதம் மூன்று மாதங்களுக்கு மொத்தம் ரூ.9000/- வழங்கப்பட்டது. இவர்களுள் முதன்மைத் தேர்வில் 48 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றார்கள். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்களுக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு இப்பயிற்சி மையத்தால் நடத்தப்பட்டது. மேலும், புதுதில்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வலர்களுக்கு தலா ரூ.5000/- வழங்கப்பட்டது. 

மேலும், இம்மையத்தின் மூலம் புதுதில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு ரூ.5,000/- வீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பயணச் செலவு மற்றும் சிறப்புப் பயிற்சிகளுக்கான ஊக்கத் தொகை ரூபாய் 50,000 என உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

=> “நான் முதல்வன்” திட்டத்தில்  பயின்றவர்களுக்கு ஊக்கத்தொகை

2023-2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், குடிமைப் பணிகள் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும்,  தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்கு தயாராகுவதற்காக மாதத்திற்கு
7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியுடைய ஆர்வலர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.7,500/- வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு முதல் முதன்மைத் தேர்வு பயிற்சி பெறும் ஆர்வலர்களுக்கு 25,000 ரூபாய் ரொக்கமாக இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1000 ஆர்வலர்களில் 276 ஆர்வலர்கள் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் ஆளுமை தேர்விற்கு 134 ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் இறுதியாக 50 மாணவ, மாணவியர்கள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். 

இதில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு தங்கிப்பயின்ற ஆர்வலர்களான
பா. சிவச்சந்திரன் என்பவர் அகில இந்திய அளவில் 23-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும்,  மோனிகா என்பவர் அகில இந்திய அளவில் 39-வது இடத்தையும், மாநில அளவில் 4-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய சு. சங்கர்பாண்டியராஜ் மற்றும் மாற்றுத்திறனாளி ப. காமராஜ் ஆகிய இரண்டு பேர் அடங்குவர். மேலும், வெற்றி பெற்றவர்களுள் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வெற்றியாளர்களுக்கும் இன்றையதினம் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

banner

Related Stories

Related Stories