தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறைகள் மீதான கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தும், புதிய அறிவிப்புகள் வெளியிடும் வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் வருமாறு :
1. போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் பயன்பாட்டிற்காக 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வழங்குதல்.
2. போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை பதக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்துதல்.
3. அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை பிரிவில் நிறுவப்பட்ட சைபர் ஆய்வகத்தைப் பயன்படுத்துவதற்கான டிஜிட்டல் தடயவியல் கருவிகள், OSINT (திறந்த மூல நுண்ணறிவு) கருவிகள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி பகுப்பாய்வு கருவிகள் வழங்குதல்.
4. புலனாய்வு சேகரிப்பு பணிகளை கணினிமயமாக்குதல் மற்றும் அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CIU) ஒரு பிரத்யேக இணையதள வலைவாயில் (web portal) நிறுவுதல்.
5. கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி, மனந்திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல்.
6. கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துதல்.
7. தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல்.