தமிழ்நாடு

டாக்டர் சாந்தா நினைவு அருங்காட்சியகம் திறப்பு : புற்றுநோய் நோயாளிகளுக்காக அவர் செய்த செயல்கள் என்ன ?

டாக்டர் சாந்தா நினைவு அருங்காட்சியகம் திறப்பு : புற்றுநோய் நோயாளிகளுக்காக அவர் செய்த செயல்கள் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்றநிகழ்ச்சியில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் டாக்டர் சாந்தா அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

புற்றுநோய் துறையில் டாக்டர் சாந்தா அவர்கள் ஆற்றிய சேவைகள்:

உலகப் புகழ்பெற்ற புற்றுநோயியல் மருத்துவர் சாந்தா அவர்கள் 11.3.1927 அன்று பிறந்தார். டாக்டர் சாந்தா அவர்கள் மயிலாப்பூர் - தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, 1949-ஆம் ஆண்டு தனது மருத்துவப் பட்டப் படிப்பு மற்றும் 1955-ஆம் ஆண்டு மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் துறையில் உயர் பட்டப்படிப்பு (MD) ஆகியவற்றை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்தார்.

ஆரம்பத்தில் பெண்களுக்கான மருத்துவத்தில் ஆர்வம் இருந்தபோதிலும், பிறகு புற்றுநோயியல் துறைக்கு மாறினார். பிறகு 1955 ஆம் ஆண்டு மருத்துவ அதிகாரியாக புற்றுநோய் நிறுவனத்தில் சேர்ந்த அவர், புகழ்பெற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தனது பணியைத் தொடங்கினார். ஏப்ரல் 13, 1955 அன்று முதல் குடிபெயர்ந்து, தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்து மறைந்தார்.

டாக்டர் சாந்தா நினைவு அருங்காட்சியகம் திறப்பு : புற்றுநோய் நோயாளிகளுக்காக அவர் செய்த செயல்கள் என்ன ?

டாக்டர் சாந்தா அவர்கள் மருத்துவமனையில் வாழ்ந்த அந்த இடம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் வி. சாந்தா 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையை இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணித்தார். அனைத்து புற்றுநோய் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்தல், புற்றுநோய் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் புற்றுநோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் போன்றவற்றில் அவர் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை பற்றி தெளிவற்றதாக இருந்த நேரத்தில், புற்றுநோய் சிகிச்சைக்கு பன்நோக்கு சிகிச்சைஅணுகுமுறை கொண்டு வந்த முன்னோடி ஆவார்.

புற்றுநோய் நிறுவனம் பொறுப்புகள் தவிர்த்து டாக்டர் வி. சாந்தா அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும், அவர் உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) புற்றுநோய் ஆலோசனைக் குழுவில் இருந்தார் மற்றும் புற்றுநோய்க்கான மாநில ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அவர் இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் தலைவராகவும் (88-90), புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசிய & பசிபிக் அமைப்புகளின் கூட்டமைப்பு (97-99) தலைவராகவும், 15வது ஆசிய & பசிபிக் புற்றுநோய் மாநாட்டின் தலைவராகவும் (1999) பணியாற்றினார்.

Dr. V. Shanta and Chief Minister kalaignar
Dr. V. Shanta and Chief Minister kalaignar

டாக்டர் சாந்தா தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் மற்றும் இந்தியாவின் மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து ஏராளமான விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். மாநில அரசு 2013 ஆம் ஆண்டு அவ்வையார் விருதை வழங்கி கௌரவித்தது. மிகவும் மதிப்புமிக்க தேசிய விருதுகளில், அவருக்கு 1986 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 2006 ஆம் ஆண்டு பத்ம பூஷண் மற்றும் 2016 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன, இது அவரது வாழ்நாள் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது. மருத்துவத் துறையில் அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் சாந்தாவுக்கு 1998 ஆம் ஆண்டு ஆந்திரப் மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகமும், 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும் அறிவியல் முனைவர் பட்டம் வழங்கியது. 2005 ஆம் ஆண்டில், டாக்டர் சாந்தா அவர்களுக்கு ஆசியாவின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான பொது சேவைக்கான ரமோன் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 1973-ஆம் ஆண்டு தொடர் எக்ஸ் கதிர் தொடர் படமெடுக்கும் கருவியின் சேவையை தொடங்கி வைத்ததோடு, 2000-ஆம் ஆண்டு மதுரம் நாராயணன் உள்நோயாளிகள் பிரிவினையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories