தமிழ்நாடு

மதுரையில் சமண பண்பாட்டு மையம் அமைக்கப்படும் : 20 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ராஜேந்திரன் !

மதுரை மாவட்டத்தில் சமண பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சமண பண்பாட்டு மையம் அமைக்கப்படும் : 20 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ராஜேந்திரன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுது. இதில் அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு நவீன சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் ரூ.30.00 கோடி மதிப்பீட்டிலும், கன்னியாகுமரியில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூரில் ரூ.30.00 கோடி மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி மற்றும் நாகூர் ஆகிய இடங்களை மேம்படுத்திட ரூ.20.00 கோடி மதிப்பீட்டிலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.100.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

2. நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பைகாரா நீர்வீழ்ச்சி மற்றும் பைகாரா படகு இல்லம் ஆகியவற்றில் வாகன நெருக்கடியை சீரமைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

3. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி (காவிரி நீர்தேக்கப்பகுதி) ஆகிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள், உணவுக்கூடம், நடைபாதை மற்றும் தகவல் மையம் ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

4. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைப் பகுதியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா, அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்படும்.

5. சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco Tourism) மேம்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதி, கோமுகி அணை, மணிமுத்தா அணை மற்றும் சேலம் மாவட்டம், கருமந்துறைப் பழப்பண்ணை ஏரி ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

6. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பூம்புகாரில் கூடுதல் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

7. திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

8. கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி மற்றும் பிச்சாவரம் பகுதிகளில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

9. திருப்பூர் அமராவதி அணைப்பகுதி, கோயம்புத்தூர் ஆழியார் அணைப்பகுதி, ஈரோடு பவானிசாகர் அணைப்பகுதி, சேலம் மேட்டூர் அணைப்பகுதி, கிருஷ்ணகிரி அணைப்பகுதி மற்றும் தேனி வைகை அணைப்பகுதி ஆகிய இடங்களில் சிறந்த சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

10. தமிழ்நாட்டின் வரலாற்றில், புத்த மற்றும் சமண பண்பாட்டுச் சிறப்புகளை நிலைநிறுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்த பண்பாட்டு மையம் மற்றும் மதுரை மாவட்டத்தில் சமண பண்பாட்டு மையம் ஆகியன அமைக்கப்படும்.

11. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் சுற்றுலா அனுபவங்களை வழங்கும் வகையில், கூடலூர் பகுதியின் மேம்பாட்டிற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சுற்றுலாப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

12. சேலம் மாவட்டம், ஏற்காடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஆகிய இடங்களில் கம்பிவட ஊர்தி (Rope Car) அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

13. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் கூடுதல் தங்கும் அறைகள் மற்றும் உணவகம் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் அமைக்கப்படும்.

14. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடிக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி புனரமைக்கப்படும்.

15. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் சாத்தனூர் அணைப்பகுதியில் சுற்றுலா அடிப்படை வசதிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

16. சுற்றுலாத் துறையின் பல்வேறு செயல்பாடுகளை முனைப்புடன் செயல்படுத்திட ‘‘ஒருங்கிணைந்த திட்ட மேலாண்மை அமைப்பு‘‘ மற்றும் “மருத்துவச் சுற்றுலாப் பிரிவு” ஆகியன ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

17. திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பவியல் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தொழில் சார்ந்த பல்வேறு அமைப்புகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பல்வேறு கட்டங்களில் ரூ.2.00 கோடி செலவில் வழங்கப்படும்.

18. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தகவல் பலகைகள், தனித்துவம் வாய்ந்த வழிகாட்டிப் பலகைகள் ஆகியன ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

19. தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு பகுதிகளில் பொது-தனியார் பங்களிப்புடன் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும்.

20. தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் பொது-தனியார் பங்களிப்புடன் தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மற்றும் முள்ளக்காடு, திருநெல்வேலி மாவட்டம், உவரி கடற்கரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், ஆத்தங்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

banner

Related Stories

Related Stories