தமிழ்நாடு

“பயிலும் பள்ளியிலேயே ஆதார்” : ஒன்றிய அரசின் “சாதனையாளர் விருது” பெற்ற தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை !

“பயிலும் பள்ளியிலேயே ஆதார்”  : ஒன்றிய அரசின் “சாதனையாளர் விருது” பெற்ற தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வுதவி மற்றும் ஊக்கத் தொகை அனைத்தும், பயனாளர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறாக நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது.

அவ்வாறாக மாணவர்களுக்கு புதிதாக ஒரு வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 1 முதல் 12 வகுப்பு வரை சுமார் 1.13 கோடி மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் ஆதார் அடையாள அட்டையில்லாத மாணவர்களுக்கு புதிய பதிவினை செய்யும் பணியினை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினை கருத்தில் கொண்டும் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 17 இலட்சம் மாணவ, மாணவியருக்கு கட்டாயப் புதுப்பித்தல் பணி மேற்கொள்வதை கருத்தில் கொண்டு “பயிலும் பள்ளியிலேயே ஆதார்” எனும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI). பதிவாளராக பதிவு பெற்றுள்ளார்.

“பயிலும் பள்ளியிலேயே ஆதார்”  : ஒன்றிய அரசின் “சாதனையாளர் விருது” பெற்ற தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை !

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” எனும் இத்திட்டம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.72 நாள்.11.03.2024-ல் வெளியிடப்பட்டது.

இத்திட்டமானது தொடர்ந்து 2024-25-ஆம் கல்வியாண்டில் ஆதார் பதிவு மேற்கொள்பவர்களைக் கொண்டு இப்பணி அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக நாளது வரை ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,12,81,426

ஆதார் புதிய பதிவு மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை:13,437

கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை : 16,06,961

ஏற்கெனவே புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்களில் கண்டறியப்பட்டவர்கள் : 62,25,210

ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீத மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இத்திட்டத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.

​பள்ளிக் குழந்தைகளின் நலனிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிடுவதுடன் “பயிலும் பள்ளியிலேயே ஆதார்” என்ற இச்சிறப்புத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவரும் அழைக்கப்படாமல் அவரவர் பயிலும் பள்ளியிலேயே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிறந்த இலக்கினை தமிழ்நாடு மட்டுமே எட்டியுள்ளது. இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையமானது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவித்துள்ளது

banner

Related Stories

Related Stories