இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
1. சிவகங்கை - கீழடி, சேலம் தெலுங்கனூர், கோயம்புத்தூர் - வெள்ளலூர், கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர், கடலூர் - பணிக்கொல்லை, தென்காசி - கரிவலம் வந்தநல்லூர், தூத்துக்குடி - பட்டணமருதூர், நாகப்பட்டினம் ஆகிய தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்.
2. உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
3.45 உலக மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும். இதன் மூலம் ஐ.நா அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்.
4. ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்.
5. இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடியில் அமைக்கப்படும.
6. எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் ரூ.40 கோடியில் அமைக்கப்படும்.
ஆகிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.