தமிழ்நாடு

”தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” : உறுதியாக சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

”தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” :  உறுதியாக சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.3.2025) செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-

நீர்நிலைகளும் - ஏரிகளும் நிறைந்து - நீர்நிலைகளில் செங்கழுநீர்ப் பூக்கள் அதிகமாக இருந்ததால் செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டு, இன்றைக்கு தலைநகர் சென்னையின் நுழைவாயிலாக இருக்கக்கூடிய இந்த செங்கல்பட்டு!

சிற்பக் கலையின் சிறப்பையும், தமிழ் கலைப் பெருமையையும் சொல்லும் மாமல்லபுரம் உள்ள மாவட்டம், இந்தச் செங்கல்பட்டு! அப்படிப்பட்ட இந்த மாவட்டம், தொழில்வளர்ச்சியில் சிறந்து விளங்க, கழக ஆட்சிக் காலங்களில், மகேந்திரா, விப்ரோ, BMW, ப்ளெக்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், டெல், சாம்சங், இன்போசிஸ், டி.வி.எஸ். சீமென்ஸ், நிசான், ஃபோர்ட், அப்பலோ டயர்ஸ்,

பல்லாவரத்தில் தமிழ்நாடு டாடா பார்மசூட்டிகல்ஸ் தொழிற்சாலை,

மறைமலை நகரில் மெட்ராஸ் மேக்னெட்டிக் மீடியா லிமிடெட் தொழிற்சாலை

532 ஏக்கர் நிலத்தில் எம்.பி.பி.எல். புதுப்பிக்கப்பட்ட நிறுவனம்

திருப்போரூரில், 500 ஏக்கர் பரப்பளவில் இயந்திரங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை,

ஶ்ரீராம் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலை

சிங்கப்பெருமாள்கோயில் அருகே மகேந்திரா நிறுவனத்தின் சார்புல இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நுழைவு வாயிலாகவும் உருவாக்கியது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!

இயற்கை வளம் - கலைப் பெருமை - தொழில் வளர்ச்சி என்று சிறந்து விளங்கும் இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்த அரசு விழாவை மிகப்பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்திருக்கின்ற பொறுப்பு அமைச்சர் நம்முடைய அருமைச் சகோதரர் தா.மோ. அன்பரசன் அவர்களை மனதார பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

ஏராளமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாட்டின் சிறுதொழில் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரக்கூடியவர் நம்முடைய தா.மோ. அன்பரசன் அவர்கள்! முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு இருக்கிறது என்றால், அதில் இவருடைய பங்கும் இருக்கிறது! அவருடைய அமைதியான, அக்கறையான, உண்மையான உழைப்பின் மூலமாக, தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது!

அதேபோல, தமிழ்நாட்டின் தொழில் துறையில், பெண்கள் அதிகமான அளவு பணியாற்றுவதற்கும் அவருடைய துறையின் பங்களிப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது! அத்தகைய அமைச்சர் அன்பரசன் அவர்கள். செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக அவர் வளர்த்து வருகிறார். அவருக்கும், இந்த மாவட்ட ஆட்சியர் திரு. அருண்ராஜ் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவருக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

இன்றைக்கு இந்த விழாவிற்கு ஏராளமான பெண்கள், சகோதரிகள், தாய்மார்கள் வந்திருக்கிறீர்கள்… உங்களில் பல பேர் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்பீர்கள். உங்களை எல்லாம் பார்க்கின்றபோது, வரலாற்றில் பதிவான ஒரு மாநாடுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது!

1929-ல் இதே செங்கல்பட்டில் நடந்த, சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடுதான் அது! பெண்கள் படிக்கவேண்டும்; வேலைக்குப் போகவேண்டும். அதற்காக இந்த மாநாட்டில், பெண்கள் அதிகளவில் பங்கேற்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் அழைப்பு விடுத்தார்! ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள்! அந்த மாநாட்டில்தான், “பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாக சொத்துரிமையும், வாரிசு பாத்தியத்தையும் கொடுக்கப்படவேண்டும்; “பெண்களும், ஆண்களைப் போலவே அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும்” “பள்ளி ஆசிரியர் வேலைகளுக்கு, பெரும்பாலும் பெண்களே நியமிக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதையெல்லாம் சட்டத்தின் மூலமாக நனவாக்கியவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!

1989-ல் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7.5.1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் வரும்போது கையில் ஆங்கில புத்தகம் ஒன்றை எடுத்து வந்தார். அது நீதிக்கட்சிக் காலத்து வரலாற்று நூல். அந்த நூலில் இருக்கின்ற 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டு நிகழ்ச்சிகளை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வாசித்தார். அதை அப்படியே சொல்கிறேன்.

“1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போது எனக்கு 5 வயதுதான். கலைஞர் சொல்கிறார் எனக்கு 5 வயது. 60 ஆண்டுகள் கழித்து என்னுடைய 65-ஆவது வயதில், இதை சட்டமாக கொண்டு வருகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அத்தகைய சுயமரியாதை மாநாட்டுக்கு அடிகோலிய பெரியார் வாழ்க! அவரது வழித்தோன்றல் பேரறிஞர் அண்ணா வாழ்க! என்று சொல்லி, இந்த சட்டத்தை அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டும்" என்று பேசினார். இப்போது அதை உச்சநீதிமன்றமும் அங்கீகாரத்திருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்; பெண்களுக்கு கல்வி வேண்டும்; வேலைகள் வேண்டும்; ஆசிரியப் பணி தரவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்த காலத்தை எல்லாம் கடந்து, இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சுகின்ற காலத்தை பார்க்கின்றோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால், சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்த உலக மகளிர் தின விழாவில் நான் பங்கெடுத்தேன். காவல்துறை முதல் விளையாட்டுத் துறை வரை அனைத்துத் துறையிலும் நம்முடைய சகோதரிகள் தூள் கிளப்பினார்கள். அதில், அந்த மேடையில் பேசிய சகோதரிகளின் பேச்சு அவ்வளவு உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது. உருக்கமாகவும் இருந்தது. கூலி வேலைக்குப் செல்கின்ற தந்தைக்குப் பிறந்த ஒரு மாணவி, இன்று விளையாட்டில் முன்னணியில் இருப்பதாகச் சொன்னார். தற்கொலைக்கு முயன்று, அதற்குப் பிறகு காப்பாற்றப்பட்ட ஒரு சகோதரி. இன்று மகளிர் சுய உதவிக் குழுவை வைத்து, பலருக்கும் வேலை வழங்குகின்ற தொழில்முனைவோராக இருக்கிறார்.

இப்படி பலர் பேசினார்கள். இதற்குக் காரணம், நம்முடைய ஆட்சியில், பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கையை வழங்கியிருக்கிறோம்.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை.

மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயண வசதி

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய்

இந்த மூன்றும் பெண்களுடைய சமூகப் பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது. இதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய காட்சி. இதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் மாட்சி.

இந்த நான்காண்டு காலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பயனடைந்த பயனாளிகள் பட்டியலை வாங்கி பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சுருக்கமாக அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

ஏனென்றால், ஏற்கனவே நான் கொஞ்சம் காலம் கடந்து வந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் ஒளி மிகுந்த முகத்துடன் உட்கார்ந்தீர்கள். இப்போது பசி மிகுந்த முகமாக மாறியிருக்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல, எங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். அதனால் சுருக்கமாக பேசி முடிக்கிறேன். காரணம் வருகின்ற வழி எல்லாம் வரவேற்பு; சாலை இருமருங்கிலும் திருக்கழுக்குன்றத்திலிருந்து, செங்கல்பட்டு வரையில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாணவியர்கள் தந்த வரவேற்பை பெற்று வருவதற்கு தாமதமாகிவிட்டதற்காக நான் உங்களிடத்தில் என்னுடைய வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த ஆட்சியின் திட்டங்களை, நிறைவேற்றப்படக்கூடிய சாதனைகளை சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால், செங்கல்பட்டு மாவட்டத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால்,

”தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” :  உறுதியாக சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், 3 இலட்சத்து 8 ஆயிரத்து 170 பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

புதுமைப் பெண் திட்டத்தில், 15 ஆயிரத்து 715 மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில், 10 ஆயிரத்து 197 மாணவர்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் போய்ச் சேருகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில், 39 ஆயிரத்து 532 மாணவ மாணவியர் பயனடைந்து பசியில்லாமல் இன்றைக்கு அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

523 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

14 ஆயிரத்து 971 பேருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக 47 ஆயிரத்து 292 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைக்கு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களும், அந்தத் துறையின் செயலாளரும் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்த மாவட்டத்தில் மட்டும்

25 ஆயிரத்து 965 பேருக்கு பல்வேறு வகையான பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு 13 ஆயிரத்து 966 பேருக்கு பட்டா வழங்கப்பட இருக்கிறது.

அதுமட்டுமல்ல, சென்ற மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நீண்ட காலமாக, நகர்ப்புறப் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்குகின்ற திட்டத்தை இந்த மாவட்டத்தில் முதலில் நான் துவங்கி வைத்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தினால் பல ஆயிரம் குடும்பங்கள் விரைவில் பயனடையப் போகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் - ஒவ்வொரு தனிமனிதருக்கும் பார்த்துப் பார்த்து நன்மை செய்யக்கூடிய அரசுதான் திராவிட மாடல் அரசு என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

'முதல்வரின் முகவரி' என்ற துறையின்கீழ், கடந்த 4 ஆண்டு காலத்தில், 21 இலட்சத்து 86 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது மக்களாட்சியின் மாபெரும் சாதனை இது. மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை அனுப்பினால்தான் நடவடிக்கை என்று இல்லாமல், கோரிக்கை மனுக்களை அரசாங்கமே மக்களுடைய இருப்பிடத்துக்குச் சென்று வாங்க வேண்டும் என்று நான் நினைத்து உருவாக்கியதுதான், 'மக்களுடன் முதல்வர்' என்ற அந்தத் திட்டம். அந்தத் திட்டத்தின் மூலம் இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 52 ஆயிரத்து 83 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டில் வசிக்கின்ற மாலதி என்ற பெண் பேசியதை நீங்கள் எல்லாம் சமூக வலைத்தளத்தில் பார்த்திருப்பீர்கள்; நானும் பார்த்தேன். அதில் என்ன சொல்கிறார் என்று சொன்னால்,

''என் மகன் ஒரு மாற்றுத்திறனாளி. அவனை கவனித்துக் கொண்டு நான் வீட்டிலேயே இருப்பதால், வேலைக்கு போக முடியவில்லை. அதனால், எனக்கு வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய கடன் வழங்கவேண்டும் என்று 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் மனு கொடுத்திருந்தார்கள். மனு வழங்கிய ஒரே மாதத்தில் எனக்கு வங்கி மூலமாக 25 விழுக்காடு மானியத்துடன் கடனுதவி தரப்பட்டது. இப்போது வீட்டில் இருந்தபடியே என்னுடைய மகனையும் பார்த்துக்கொண்டு, துணிகளையும் வாங்கி விற்பனை செய்கிறேன்" என்று அந்த மாலதி சொல்லி இருக்கிறார். இப்படி எத்தனையோ இலட்சம் பேர் வாழ்க்கையில் நேரடியாக உதவிகளை செய்து கொண்டு வருகின்ற ஆட்சி தான் நம்முடைய ஆட்சி.

கடந்த நான்காண்டுகளில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்த்தெடுக்க ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சில முத்திரைத் திட்டங்களை மட்டும் நான் தலைப்புச் செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டதோடு அங்கே 6 ஏக்கர் பரப்பளவில், நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டில் தனியார் பங்களிப்புடன் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதுது.

மாமல்லபுரத்தில் 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வரதராஜபுரம், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 42 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில், 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

மறைமலைநகரில் புதிய தாவரவியல் பூங்கா

உலகப்புகழ் பெற்ற ‘லண்டன் க்யூ கார்டன்’ அதனுடன் சேர்ந்து 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது.

தாம்பரம் அரசு மருத்துவமனையை 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள், கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

43 கோடி செலவில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் அரசு பாதுகாப்பு இல்லம் ஆத்தூர் கிராமத்தில் திறக்கப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை உணவகம் பயன்பாட்டில் இருக்கிறது.

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 52 சென்ட் கபரிஸ்தான் அமைச்சர் அன்பரசன் அவர்கள் கோரிக்கையை ஏற்று அதுவும் அமைக்கப்பட இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ஒரு புதிய அறிவிப்பையும் இந்த விழா மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன். அப்படி அறிவிக்கவில்லை என்றால் அன்பரசன் என்னை விடமாட்டார். தொழில்துறையில் முன்னணியில் இருக்கக்கூடியது செங்கல்பட்டு மாவட்டம். நேற்று கூட அதற்கு உதாரணமாக, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் அந்தப் பணிகளை முடித்து கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை நான் வந்து தொடங்கி வைத்தேன்.

”தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” :  உறுதியாக சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று இந்த விழா மூலமாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றன். நாங்கள் எதை அறிவித்தாலும் அதெல்லாம், அரசாணையாகும். வேகமாக செயல்பாட்டிற்கு வரும்! அதுமட்டுமல்ல, திட்டங்களை முடித்து, திறப்பு விழாவுக்கு நானே வருவேன்!

இப்படி, துரிதமாக செயல்படுகின்ற காரணத்தால் தான் இந்தியாவின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது! பொருளாதாரக் குறியீடுகள் எல்லாவற்றிலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடிக்கும் மேலாக, தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம், நம்முடைய ஆட்சியின் மீதான நம்பிக்கை! வறுமை இல்லை! பட்டினிச் சாவு இல்லை! என்ற நிலையில் திறமையான - வளமான - உண்மையான நிர்வாகத்தை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம். சில தடைகள் மட்டும் இல்லையென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகமாக வளர்ந்திருக்கும்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாயை தருவோம் என்று திமிராக பேசுகிறார் யார்? ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள். அவர்கள் தேசியக் கல்விக் கொள்கை என்கிற பெயரில் புகுத்துகின்ற கொள்கை என்னவென்று கேட்டால், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியையே மொத்தமாக அழித்து, ஒழித்துவிடும் என்று தான் நாம் அதை எதிர்க்கிறோம்.

கல்விக்குள் மாணவர்களைக் கொண்டு வர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல்திட்டங்களும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.

கல்வியை தனியார்மயம் ஆக்குவது,

பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது,

கல்வியில் மதவாதத்தை புகுத்துவது,

சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு,

கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு,

கல்வியில் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது

இப்படி நிறைய இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். ஆனால், “இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும்” என்று பிளாக்மெயில் செய்கிறார் யார்? ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள். அதனால் தான் ஏற்கனவே உறுதியாக சொன்னேன். திட்டவட்டமாக சொன்னேன். அழுத்தந்திருத்தமாக சொன்னேன். 2000 கோடி இல்லை, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக நான் சொன்னேன். இந்த மேடையில் அதைத்தான் மறுபடியும் சொல்கிறேன். உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாடு இவர்களின் சதிகளுக்கு எதிராக விடாமல் போராடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று பாராளுமன்றத்தில், தர்மேந்திர பிரதான் அவர்கள் என்ன பேசியிருக்கிறார் - “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், அராஜகவாதிகள் என்று” நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார். ஆனால் பேசிய அரைமணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள் நம்முடைய தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய போர்க்குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த மேடையின் மூலமாக உங்களின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மானம் அவன் கேட்ட தாலாட்டு - மரணம் அவன் ஆடிய விளையாட்டு” என்று எழுதினார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அந்தத் தலைவரின் கலைஞருடைய வாரிசுகள் நாங்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காட்டினார்கள். அதுமட்டுமல்ல, அ.தி.மு.க. உறுப்பினர்கள் போல பா.ஜ.க. அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல் தமிழ்நாட்டின் உரிமைக்கு யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று நிருபித்திருக்கிறார்கள். நாற்பது பேர் சென்று என்ன செய்வார்கள்?” என்று கேட்டவர்களுக்கெல்லாம் நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இதே போர்க்குணத்துடன் தமிழ்நாட்டுக்காகப் போராடுவோம். இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சியை நடத்துவோம். அதற்கு இப்போது போல் எப்போதும் மக்களான உங்களுடைய ஆதரவு தொடர வேண்டும்! தொடர வேண்டும்! தொடர வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories